திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாடு


திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 15 April 2023 6:45 PM GMT (Updated: 15 April 2023 6:46 PM GMT)

திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை யூனியனில் 47 கிராம ஊராட்சிகள் உள்ளன. மாவட்டத்திலேயே நீர் ஆதாரம் நிறைந்த பகுதியாக உள்ள திருவாடானை யூனியனில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது.

காலிக்குடங்களுடன்

எங்கு சென்றாலும் பொதுமக்கள், பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீரை தேடி அலைந்து திரிவதை பார்க்க முடிகிறது. மேலும் குடிக்கவும், தேவைகளுக்கு பயன்படுத்தவும் முடியாத நிலையில் உள்ள அசுத்தமான தண்ணீரை குடங்களில் சேகரித்து செல்லும் அவலத்தையும் பார்க்க முடிகிறது. கண்மாய், ஊருணிகள் வறண்டு இருப்பதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

முகமது முக்தார் யூனியன் தலைவர் திருவாடானை:-

திருவாடானை யூனியனில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் முறையாக நடைபெறவில்லை. இப்பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் குடிநீர் வாரிய அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு கூட்டங்கள் 2 முறை நடத்தப்பட்டது. கலெக்டரிடம் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. யூனியன் பொது நிதியின் மூலம் கவுன்சிலர்களின் ஆலோசனையின் பேரில் லாரிகள் மூலம் குடிநீர் கிடைக்காத கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய பரிசீலனை செய்து வருகிறோம்.

ஒருநாளைக்கு ரூ.300

பரக்கத்அலி, செயலாளர் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு வெள்ளையபுரம்:- இப்பகுதியில் கூட்டு குடிநீர் திட்டங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது அந்த திட்டங்கள் செயலிழந்துவிட்டது. புதிய திட்டங்கள் இந்த பகுதியில் உருவாக்கப்படவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் காவிரி குடிநீரை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. கூட்டு குடிநீரும் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கிறது. இப்பகுதியில் மிகவும் அத்தியாவசியமான குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூருல் அமீன், சமூக ஆர்வலர், பாசிப்பட்டினம்:- கலியநகரி ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. குடிநீரை ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மற்ற தேவைகளுக்கு ஒரு குடம் ரூபாய் 5-க்கு வாங்குகின்றனர். கலியநகரி ஊராட்சியில் தினமும் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 300 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. எங்கள் ஊராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் வாரம் ஒரு முறைதான் வினியோகம் செய்யப்படுகிறது.

போர்க்கால நடவடிக்கை

புனிதா, மாவட்ட மகளிர் அணி செயலாளர், நாம் தமிழர் கட்சி பாண்டுகுடி:- இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. பெண்கள் குடிநீருக்காக இரவு, பகலாக சிரமப்பட்டு வருகின்றனர்.

கண்மாய், ஊரணிகள் வற்றி விட்டதால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரைதான் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கால்நடைகளும் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறது.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முழுமையான பராமரிப்பு இல்லாமல் எல்லா கிராமங்களுக்கும் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் சமுதாய கிணறுகளை உருவாக்கி தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story