திருவாடானை தாலுகாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
திருவாடானை தாலுகாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர்திட்டம் மற்றும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் சீரான முறையில் குடிநீர் வினியோகம் நடைபெறுவதில்லை. இதனால் பொதுமக்கள் தள்ளுவண்டிகளில் காலிக்குடங்களுடன் குடிநீரைதேடி அலைந்து திரியும் அவல நிலை இருந்து வருகிறது. தற்போது இந்த தாலுகாவில் உள்ள கிராமங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீர் குழாய்களில் கசியும் தண்ணீரை பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என இரவு பகலாக நீண்ட நேரம் காத்திருந்து குடங்களில் சேகரித்து செல்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- தற்போது கண்மாய், ஊருணிகளில் தண்ணீரின்றி வறண்டு போய்விட்டது. குழாய்களில் வரும் தண்ணீரைதான் நம்பி இருக்கிறோம். குடிப்பதற்கு மட்டுமல்லாமல் எல்லா தேவைகளுக்கும் குழாய்களில் வரும் தண்ணீரைதான் சிறுக சிறுக பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது. கால்நடைகள் தண்ணீர் இல்லாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றன. பெரும்பாலான கிராமங்களுக்கு காவிரி குடிநீர் எப்போதாவதுதான் வருகிறது. கடும் வறட்சி நிலவி வருவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.