தண்ணீர் பஞ்சம்


தண்ணீர் பஞ்சம்
x

தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் நாகை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் நாகை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம்

நாகை மாவட்டத்தில் குடிநீர் தேவை உச்சம் தொட்டுள்ளது. கோடை காலத்தை விட அதிகமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பெண்கள், கைகளிலும்- தலையிலும், ஆண்கள் மோட்டார் சைக்கிள்களிலும் குடங்களை கட்டி குழாயடிகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது.

நாகை மாவட்டத்தில் கொள்ளிடம், வேளாங்கண்ணி, கே.வி. கோட்டகம், மேளவாஞ்சூர், அகர ஒரத்தூர், வேதாரண்யம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதில் 80 சதவீதத்துக்கும் மேல் கொள்ளிடம் ஆற்றின் கூட்டு குடிநீர் திட்டத்தை நம்பி தான் இருக்க வேண்டியுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

கோடை காலம் தொடங்கிய போது கொள்ளிடத்தில் நீர் ஆதாரம் குறைந்து விட்டதால், போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்லும் கடைமட்ட பகுதிகளான கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வந்தது. பெரும்பாலான பகுதிகளில் 10 நாட்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் வருவது கிடையாது.

நாகை நகராட்சியில் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குறைவாக தண்ணீர் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அந்த குடிநீரும் சாக்கடை கலந்து வருவதால், பொதுமக்கள் கிடைத்த தண்ணீரையும் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவ்வப்போது டேங்கர் லாரி மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீரை பிடிப்பதற்காக பல மணி நேரம் காலி குடங்களுடன் பெண்கள் காத்திருக்கின்றனர்.

எனவே நாகையின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நிதி ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 போர்வெல் மூலம் தண்ணீர்

இதுகுறித்து நாகை நகர்மன்ற உறுப்பினர் பரணிகுமார்:

நாகை நகர் பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில் நடப்பாண்டு நகராட்சியில் கடும் குடிநீர் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான 9 போர்வெல் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2006-ம் ஆண்டு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் 6 போர்வல்கள் கிடப்பில் போடப்பட்டு, ஓடாச்சேரி, குருக்கத்தி, கள்ளுக்குடி உள்ளிட்ட 3 போர்வெலில் இருந்து மட்டுமே குடிதண்ணீர் நாகை நகராட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது.

மாற்று மோட்டார் அமைத்து தர வேண்டும்

கொள்ளிடத்தில் நீர் ஆதாரம் குறைந்து விட்டதால் இந்த 3 போர்வெல்லை நம்பி தான் நகராட்சி உள்ளது. அப்படி இருக்க இந்த இந்த போர்வெல்லில் தண்ணீர் வினியோகம் செய்யும் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. ஒரு மோட்டர் பழுதடைந்து விட்டால் அதற்கு மாற்றாக மற்றொரு மோட்டார் இருக்க வேண்டும். அது இல்லாததால் தற்போது தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியவில்லை. எனவே நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மோட்டார்களை புதிதாக மாற்றி, மாற்று மோட்டாரும் அமைத்து தர வேண்டும் என்றார்.

சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர்:

நாகை மாவட்டத்தில் தற்போது தண்ணீர் பஞ்சத்தால் ஒரு போக சாகுபடியே கேள்விக்குறியாகிவிட்டது. அது ஒரு புறம் இருக்க அத்தியா வசிய தேவையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இதனால் கிராமப்புறங்களில் பொதுமக்கள் சரியாக தண்ணீர் குடிக்காமல் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். வீட்டுக்கு, வீடு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்ட பணிகளும் ஆமை வேகத்தில் நடப்பதால் தண்ணீரில் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே நாகை மாவட்டத்தை மிகவும் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, சிறப்பு நிதி ஒதுக்கி, தண்ணீர் ஆதாரத்தை பெருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story