கூடங்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; கலெக்டரிடம், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு


கூடங்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; கலெக்டரிடம், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு
x

கூடங்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு வழங்கினார்.

திருநெல்வேலி

கூடங்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு வழங்கினார்.

குடிநீர் தட்டுப்பாடு

அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு வழங்கினார்.

அதில் கூறி இருப்பதாவது:-

கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உடனடியாக கலெக்டர் தலையிட்டு கூடங்குளம் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வள்ளியூர் பஸ்நிலையத்தின் கட்டிட வேலையை துரிதப்படுத்த வேண்டும். மேலும் பெரும்பான்மையான பஸ்கள் வள்ளியூர் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வள்ளியூர் பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அனைத்து பஸ்களும் வள்ளியூர் நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இன்பதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

பென்னி குயிக் சிலை

தமிழ்நாடு அரசால் லண்டன் மாநகரில் திறக்கப்பட்ட பென்னி குயிக் சிலைக்கு, அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் கருப்பு துணி கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் மாநகரில் தமிழகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.

சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது. கட்டுமான நிறுவனங்கள், அணுமின் நிலையம் உள்ளிட்டவைகளுக்கு தண்ணீரை விற்பனை செய்வதே இதுபோன்ற நிலைக்கு காரணம் ஆகும்.

கரூரில் வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்துக்கு உரியது. அதிகாரிகளுக்கு இது சோதனையான காலம். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சட்டங்கள் பற்றி தெரியாமல் தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி புதிய திறப்பு விழா கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்குமார், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story