பாசன வசதிக்காக வாய்க்கால்களில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும்


பாசன வசதிக்காக வாய்க்கால்களில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும்
x

பாசன வசதிக்காக வாய்க்கால்களில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

வாய்க்கால்களை தூர்வார வேண்டும்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசினர். இதில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்திற்கு பாசன வசதிக்காக பொன்னாறு மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால்களில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும். சுக்கிரன் ஏரி, தூத்தூர் பெரிய ஏரிகளை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முழுமையாக நடைபெறாமல் மணகெதி என்ற இடத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பருவ மழை தொடங்கும் முன்பே மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால்கள் தூர்வார வேண்டும், என்றார்.

மானியம் சென்றடைவதில்லை

அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுகையில், நிலம் வாங்கும்போது விவசாயிகளிடம் இருந்து, அரசு வழிகாட்டுதலின்படி ஆவண எழுத்தாளர்கள் கட்டணம் வாங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள கட்டணத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பலகையில் எழுத வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் சரியானபடி சென்றடைவதில்லை. சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்தை விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் வழங்க வேண்டும். வேலூர் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின்மோட்டாரை இயக்க முடியவில்லை. எனவே சீரான மின்சாரம் வழங்க வேண்டும். புறம்போக்கு இடத்தில் மின்சாரம் வழங்குவதை தடை செய்ய வேண்டும். வேளாண் உபகரணங்களுக்கு குறைந்த வாடகை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு உழவு பணிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டு வீணாகிறது. எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்து நெல்லை அரவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாவட்டத்தில் அதிகப்படியாக முருங்கை விளைவதால் முருங்கை ஏற்றுமதி செய்ய வேண்டும். பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பகுதி சார்ந்த பிரச்சினைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.


Next Story