பாசனத்துக்கு கோடகன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் மனு

பாசனத்துக்கு கோடகன் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தி.மு.க., பா.ஜனதா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பாசனத்துக்கு கோடகன் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தி.மு.க., பா.ஜனதா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தி.மு.க.
நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று வந்தனர். அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "பாபநாசம் அணையில் இருந்து கோடகன் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இந்த கால்வாய் பாசன பகுதியில் வாழை, கால்நடை தீவன பயிர் கருகி வருகிறது. எனவே உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்'' என்றனர்.
பா.ஜனதா
இதே போல் பாரதீய ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள், கோடகன் கால்வாய் பாசன பகுதி விவசாயிகள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அதிகாரிகளை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறுகையில், "பாபநாசம் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தண்ணீர் கன்னடியன் கால்வாயில் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. மற்ற கால்வாய்களில் திறக்கப்படவில்லை.
கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால், அதன் பாசன பகுதியில் வாழைகள், கால்நடை தீவன பயிர் கருகி வருகிறது. எனவே இந்த பயிர்களை காப்பாற்ற உடனடியாக கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும். அணையில் 70 அடி மட்டுமே தண்ணீர் இருப்பதால்
சட்டமன்றத்தில் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
அரிக்கொம்பன் யானை
அரிக்கொம்பன் யானையை பிடித்து வந்து நெல்லை மாவட்ட வனப்பகுதியில் விட்டுள்ளனர். அதனை கேரளாவில் பிறந்த வாழ்விடத்தில் கொண்டு போய் விட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, காசி அல்லது ராமேஸ்வரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அவர் ராமேஸ்வரத்தில் போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றி பெறுவார். இந்த வெற்றி தமிழ்நாடு முழுவதும் பிரதிபலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






