அன்னூர் குளத்துக்கு மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கியது


அன்னூர் குளத்துக்கு மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கியது
x
தினத்தந்தி 30 Jun 2023 5:00 AM IST (Updated: 30 Jun 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

அத்திக்கடவு-அவினாசி திட்ட சோதனை ஓட்டத்தில் அன்னூர் குளத்துக்கு மீண்டும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

அன்னூர்

அத்திக்கடவு-அவினாசி திட்ட சோதனை ஓட்டத்தில் அன்னூர் குளத்துக்கு மீண்டும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஒரு பகுதி செழிப்பாகவும், மற்றொரு பகுதி வறட்சியாகவும் இருந்தது. மேலும் மழைக்காலத்தில் பவானி ஆற்றில் ஏராளமான தண்ணீர் வீணானது. எனவே இந்த உபரிநீர் மூலம் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை ரூ.1,657 கோடியில் நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டு அருகே மழைக்காலத்தில் ஆற்றில் செல்லும் உபரிநீரை எடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் தண்ணீர் திறப்பு

அதன்படி ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து குழாய்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பவானி ஆற்றின் கரையோரம், நல்லாகவுண்டன்பாளையம், திருவாச்சி, போளநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்தம் 1,045 குளங்கள் பயன்பெறும்.

தற்போது சோதனை ஓட்டம் தொடங்கி குளங்களுக்கு தண்ணீர் விடப்பட்டு வருகிறது. அதன்படி 6-வது நிலையத்தில் உள்ள அன்னூர் நீருந்து நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதம் இறுதியில் தண்ணீர் விடப்பட்டது. அப்போது அன்னூர் குளத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அந்த குளத்துக்கு ஓரளவுக்கு தண்ணீர் கிடைத்தது. தற்போது மீண்டும் இந்த குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

அன்னூர் குளம்

120 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னூர் குளம் நிறைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இந்த குளத்தை நம்பி மறைமுகமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் காரணமாக 10 ஆண்டுக்கு பிறகு குளத்துக்கு தண்ணீர் வந்து உள்ளது. தற்போது 2-வது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் குளம் வேகமாக நிரம்பி வருகிறது.

தற்போது குளம் 50 சதவீதம் நிரம்பி விட்டது. தற்போது விடப்படும் தண்ணீரின் அளவு போன்று 10 நாட்கள் விட்டால் குளம் நிரம்பி விடும். எனவே குளத்துக்கு தண்ணீர் வருவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story