தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்


தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 3 Oct 2022 6:45 PM GMT (Updated: 3 Oct 2022 6:46 PM GMT)

இளையான்குடி பேரூராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி பேரூராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டம்

இளையான்குடியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் நஜிமுதீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் உறுப்பினர்களை வரவேற்று பேசினார். அலுவலக இளநிலை உதவியாளர் முருகன் வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பித்து தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில், வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு காமராஜர் சாலையில் பயன்பாடற்ற பழைய காவலர் குடியிருப்பு பகுதியில் புதிய நூலக கட்டிடம் கட்டுவது, 15-வது நிதி குழு மூலமாக ரூ.62.13 லட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமுதாய கழிப்பிடங்கள், பழைய பஸ் நிலையத்தில் புதிய கழிப்பறை கட்ட பணிகள் மேற்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடிநீர்

மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீர் அதிக இடைவெளி நாட்களில் வினியோகம் செய்யப்படுவதை தவிர்த்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஆட்டடி சாலையில் மயானத்திற்கு வழங்கப்பட்ட இடத்தை மீண்டும் நில அளவை செய்து மயான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவர் நஜிமுதீன் உறுதி அளித்தார். முடிவில் இளநிலை உதவியாளர் முருகன் நன்றி கூறினார்.


Next Story