பாப்பாரப்பட்டி அருகேஅரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா?


பாப்பாரப்பட்டி அருகேஅரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா?
x
தினத்தந்தி 21 Sep 2023 7:00 PM GMT (Updated: 21 Sep 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரபட்டி அருகே அரசு நடுநிலைப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரசு நடுநிலைப்பள்ளி

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 126 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் கழிவறைகளுக்கு தண்ணீர் வழங்க கழிவறை வளாகத்தின் மேல் 2 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ேநற்று ஊராட்சி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது பள்ளிக்கூடத்தில் உள்ள தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்றப்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவர் கழிவறை மேல் உள்ள தொட்டியில் ஏறி தண்ணீர் முழுவதும் நிரம்பி விட்டதா? என பார்த்தபோது நீர் கலங்கலாக இருந்தது. துர்நாற்றமும் வீசியது.

அதிகாரிகள் ஆய்வு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் பாபுவிடம் தெரிவித்தார். பின்னர் தலைமை ஆசிரியர் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கல்பனாவிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து பென்னாகரம் தாசில்தார் சவுகத் அலி, பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி, பென்னாகரம் உதவி கல்வி அதிகாரி துளசிராமன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் (ஆர்.ஓ.) பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

பரபரப்பு

தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவிக்கப்பட்ட கழிவறைகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து தடயவியல் நிபுணர் தீபா தண்ணீர் மாதிரியை எடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் நீரை பரிசோதனைக்காக தர்மபுரிக்கு எடுத்து சென்றனர். அங்கு நீரை பரிசோதனை செய்த பின்னரே தண்ணீரில் மனித கழிவு கலக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story