தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற வேண்டும்
குறுவை சாகுபடியை காப்பாற்ற தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர், ஜூலை.1-
குறுவை சாகுபடியை காப்பாற்ற தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
ராயமுண்டான்பட்டி வெ.ஜீவகுமார்: மேட்டூர் அணையில் நீர்மட்டம் 90 அடியாக குறைந்துவிட்டது. கர்நாடகத்திலும், கேரளத்திலும் குறிப்பிட்ட காலத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லை. வறட்சி காலத்தில் எவ்வளவு தண்ணீர் பகிர்வது என்கிற அட்டவணை போடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தண்ணீர் கேட்டுப் பெற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தை கூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவோணம் வீரப்பன்: தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. தேங்காய் கொப்பரை கிலோ ரூ.120-க்கும், குடுமியுடன் கிலோ ரூ.130-க்கும் கொள்முதல் செய்ய வேண்டும். 18 நாட்கள் ஆகியும் திருவோணம் பகுதிகளில் உள்ள எந்த வாய்க்கால்களுக்கும் தண்ணீர் வரவில்லை.
பயிர்க்காப்பீடு
சுவாமிமலை சுந்தரவிமல்நாதன்: நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி செய்ய போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததாலும் ஆற்றுநீரை நம்பியுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்தநிலை நீடித்தால் காவிரி டெல்டா மாவட்டங்களை இயற்கை இடர்பாடினால் பாதிக்கப்பட்ட, வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
காட்டுக்குறிச்சி செந்தில்குமார்: காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புகளின்படி தமிழகத்துக்கு மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகஅரசு வழங்க சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொள்ள வேண்டும்.
வாழை இலை
அம்மையகரம் ரவிச்சந்தர்: ஓட்டல்கள், உணவு விடுதி, டிபன் கடைகளில் பிளாஸ்டிக் இலை, பாலித்தீன் பேப்பர் பயன்படுத்த தடை விதித்து வாழை இலைகள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.பொன்னவராயன்கோட்டை வீரசேனன்: தற்போது நுங்கு சீசன் என்பதால் பனை விதைகள் அதிகமாக இலவசமாகவே கிடைக்கும்.
இந்த பனை விதைகளை ஊராட்சிக்கு 1000 பனை விதைகள் என 589 ஊராட்சிகளிலும் 100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு விதைக்க வேண்டும்.பாபநாசம் முகமது இப்ராகீம்: குறுவை சாகுபடியை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்.மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.