ராமநாதபுரத்தில் தர்பூசணி வியாபாரம் பாதிப்பு


ராமநாதபுரத்தில் தர்பூசணி வியாபாரம் பாதிப்பு
x
தினத்தந்தி 9 May 2023 6:45 PM GMT (Updated: 9 May 2023 6:45 PM GMT)

தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் ராமநாதபுரம் பகுதியில் தர்பூசணி பழங்கள் அழுகி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் ராமநாதபுரம் பகுதியில் தர்பூசணி பழங்கள் அழுகி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விற்பனை பாதிப்பு

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து கோடைகால சீசன் தொடங்கியது. அப்போேத கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வந்தது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், தர்பூசணி உள்ளிட்டவற்றை பருகி வந்தனர். இதனால் ராமநாதபுரம் நகரில் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பழம் என்று சொல்லக்கூடிய தர்பூசணி பழங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பல்வேறு ஊர்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் தர்பூசணி பழங்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும், டன் கணக்கில் தர்பூசணி பழங்கள் அழுகி விட்டதால் வியாபாரிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

விலை குறைவு

இது குறித்து தர்பூசணி பழ வியாபாரி வன்னி கூறியதாவது:- கோடை கால சீசன் தொடங்கியதிலிருந்து கடந்த மாதம் தர்பூசணி பழம் விற்பனை நன்றாகவே இருந்தது. 1 கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்து வந்தோம். திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றோம். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே தொடர்ந்து பெய்த கோடை மழையால் தர்பூசணி பழங்கள் விற்பனை குறைந்து விட்டது. இதுவரையிலும் 1 டன்னுக்கு மேலான தர்பூசணி பழங்கள் அழுகி விட்டதால் அந்த பழங்களை குப்பையில் கொட்டியுள்ளோம்.

இதனால் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது ரூ.5 குறைந்து ஒரு கிலோ தர்பூசணி பழம் ரூ.10-க்கு விற்பனை செய்து வருகின்றோம் என்றார்.


Next Story