நெய்க்காரப்பட்டி பகுதியில் தர்பூசணி சாகுபடி தீவிரம்
நெய்க்காரப்பட்டி பகுதியில் தர்பூசணி சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோடைகாலம் தொடங்கிவிட்டாலே வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்பானம், கூழ், இளநீர், தர்பூசணி ஆகியவற்றை வாங்கி பருகுகின்றனர். எனவே கோடை சீசனில் சாலையோரங்களில் புற்றீசல் போல கூழ், தர்பூசணி விற்பனை கடைகள் முளைப்பதை பார்க்க முடியும். இதற்கேற்றாற்போல் நெய்க்காரப்பட்டியை அடுத்த பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னமாபட்டி, லட்சலப்பட்டி, லட்சுமாபுரம் ஆகிய பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தர்பூசணி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தர்பூசணி சாகுபடி, அறுவடை என இரண்டும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி விவசாயிகள் கூறுகையில், தர்பூசணி 70 நாள் பயிர் என்பதால் கோடை காலத்தை முன்னிட்டு கார்த்திகை, மாசி என 2 பருவங்களில் சாகுபடி நடைபெறுகிறது. முதல் பருவ அறுவடை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும். 2-ம் பருவ தர்பூசணி அறுவடை ஏப்ரல், மே மாதத்தில் இருக்கும். இங்கு பறிக்கப்படும் காய்கள் கேரளா, திருப்பூர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. விதை, பூச்சிமருந்து, பறிப்பு என ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. விளைச்சலும் ஏக்கருக்கு 8 டன் வரை கிடைக்கிறது. தற்போது 1 டன் தர்பூசணி ரூ.5 ஆயிரம் வரை போகிறது. ஆனால் காட்டுப்பன்றி தொல்லை, நோய் பாதிப்பு போன்றவற்றால் சேதமும் அதிகமாக உள்ளது. மேலும் வெளியூர் காய் வரத்து இருந்தால் விலையும் குறையும். ஆகவே 1 டன் ரூ.8 ஆயிரத்துக்கு விற்றால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் என்றனர்