விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தர்பூசணி
திருமருகல் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணிகளை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
திட்டச்சேரி:
திருமருகல் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணிகளை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
உக்கிரத்தை காட்டுகிறது
கோடை காலம் தொடங்கிய முதல் திருமருகல் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இடையில் அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழையினால் வெப்பம் தணிந்திருந்தது. இதற்கிடையில் கோடை காலத்தில் உச்சக்கட்ட வெயில் நிலவும் அக்னி நட்சத்திரம் முடிந்த தினம் மழையும் பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என்ற ஒருவித கலக்கத்தில் பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிந்து மாதங்கள் கடந்தும் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது. கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது. சராசரியாக 100 டிகிரி அளவிற்கு வெயில் பதிவாகி வருகிறது.
பொதுமக்கள் கடும் அவதி
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையில் நடந்து சென்றவர்கள் பலர் குடையை பிடித்தபடி சென்றதை காணமுடிந்தது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.
குளிர்ச்சி தரக்கூடிய...
கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி பழம், முலாம் பழம் வாங்கி சாப்பிட்டனர்.
இதேபோல குளிர்ச்சி தரக்கூடிய மற்றும் தாகத்தை தணிக்க கூடிய இளநீர், பழச்சாறு வகைகள், கரும்பு சாறு உள்ளிட்ட ஜூஸ் வகைகளையும் வாங்கி அருந்தினர்.
வெயிலின் தாக்கத்தால் தற்போது இவற்றின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சாலையோரங்களில் உள்ள இளநீர் கடைகள், தர்பூசணி பழம், ஜூஸ் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.