தர்பூசணி விற்பனை அமோகம்


தர்பூசணி விற்பனை அமோகம்
x

தர்பூசணி விற்பனை அமோகமாக நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

தர்பூசணி

கோடை கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவற்றை வாங்கி குடிப்பார்கள். குறிப்பாக தர்பூசணிகளை விரும்பி வாங்கி உண்பார்கள். தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு சத்தும் நிறைந்ததாகும். தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தர்பூசணி விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

தர்பூசணிகளை திண்டிவனத்தில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாபாரம் செய்கிறார்கள். மேலும் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் விவசாயிகள் தர்பூசணி பயிரிடுகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் தர்பூசணிகளும் விற்பனைக்கு வருகின்றன என்று வியாபாரி ஒருவர் கூறினார்.

விற்பனை அமோகம்

உடையார்பாளையம் பகுதியில் தர்பூசணி விற்பனை அமோகமாக நடக்கிறது. ஒரு கிலோ தர்பூசணி ரூ.20 முதல் ரூ.25 வரை பழத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. 3 கிலோ எடையுள்ள தர்பூசணிகளை பலர் வீட்டிற்கு வாங்கி செல்கின்றனர். மேலும் சாலையோர கடைகளில் தர்பூசணியை சிறிய துண்டுகளாக்கி விற்பனை செய்கின்றனர்.

அந்த வழியாக செல்பவர்கள், தர்பூசணி துண்டுகளை வாங்கி, அதன் மீது மிளகாய் பொடி தூவி ருசித்து சாப்பிடுகின்றனர். கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் தர்பூசணிகளை வாங்கி விரும்பி சாப்பிடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story