நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழையின் போது அனைத்து முக்கிய துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் தொலைபேசி எண்களை அனைத்து அலுவலர்களும் சேகரித்து வைத்திருக்க வேண்டும். காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கங்களை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு செய்து காட்ட வேண்டும்.
பொதுப்பணி துறையினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேவைப்படும் போது தங்க வைப்பதற்கு தகுதியான இடங்களை தேர்ந்தெடுத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அங்கு மின்வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு
மாவட்டம் முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்தில் தங்க வைக்க பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்கள் விடுப்பில் செல்லாமல் சுழற்சி முறையில் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.
வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் தங்கள் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






