நைனாமலை பெருமாள் கோவில் சாலைக்கு வழி பிறக்குமா?


நைனாமலை பெருமாள் கோவில் சாலைக்கு வழி பிறக்குமா?
x

சேந்தமங்கலம் அருகே நைனாமலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

நைனாமலை பெருமாள் கோவில்

சேந்தமங்கலம் அருகே உள்ள புதன் சந்தையில் நைனாமலை உள்ளது. இந்த மலையின் உயரம் சுமார் 2 ஆயிரத்து 600 அடியாகும். இதன் உச்சியில் சுமார் 120 அடி உயரமுள்ள ஒரே பாறையின் மேல் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து 3,700 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும்.

தமிழ் மாதமான ஆனி முதல் தேதியில் இருந்து ஆடி மாதம் 30-ந் தேதி முடிய 2 மாதங்களும் சூரியன் உதிக்கும் போது சூரியனின் கதிர்கள் சாமியின் மீது நேரே விழுந்து பிரகாசிப்பது அங்குள்ள ஒரு சிறப்பு அம்சமாகும். எனவே ஆடி மாதங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த 1939-ம் ஆண்டில் கோவிலின் சுற்றுப்பிரகாரம் கட்டப்பட்டது. கோவிலின் சில பகுதிகள் திருமலை நாயக்கரின் தம்பி கோவிந்தப்பா நாயக்கரால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சாலை அமைக்கும் பணி

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் இங்கு வந்து 5 வாரங்களும் பெருமாளை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், சேலம் மற்றும் சேந்தமங்கலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் கோவிலின் அடிவார பகுதிக்கு இயக்கப்படும்.

இக்கோவிலுக்கு சாலைவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். அதை நிறைவேற்ற சுமார் ரூ.13 கோடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைக்காததால் பணி தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பணியை விரைந்து முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகளை காண்போம்.

பஸ் போக்குவரத்து

கட்டிட மேஸ்திரி குணசேகரன்:-

நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நைனாமலை கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்து விட்டு வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக மலை மேல் ஏற முடியாத சூழ்நிலையால் அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயரை வணங்கி வருகிறேன். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக நைனாமலைக்கு பஸ் செல்வதற்கு மலைப்பாதை அமைக்கும் திட்டம் தொடங்கியது. ஆனால் அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

என்னை போன்ற வயது முதிர்ந்த பக்தர்கள் பலரும் கோவிலுக்கு பஸ்சில் சென்று வர ஆர்வமாக உள்ளனர். எனவே வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், சிறு குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பெருமாளை தரிசிக்கும் விதமாக விரைவில் மலைப்பாதை பணிகள் முடிக்கப்பட்டு, அங்கு பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும். இதை தான் சேந்தமங்கலம் வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

இயற்கை வழி விவசாயி குமரேசன்:- நைனாமலை பகுதியில் சுமார் 50 ஏக்கர் வனப்பகுதியில் மலைப்பாதை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக மலையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படும் சூழ்நிலை இருப்பதால் அங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்குள்ள மரங்களை அகற்றினாலும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மழைக்காலத்தில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மலைச்சாலை பாதிப்பு ஏற்படா வண்ணம், கழிவுநீர் வடிகால் சிறந்த முறையில் கட்டப்பட வேண்டும்.

விதைபந்துகள்

ஓய்வு பெற்ற வனத்துறை பணியாளர் மாதேஸ்வரன்:- மலைப்பகுதியில் வனத்துறை மூலமாக பல்லாயிரக்கணக்கான விதை பந்துகள் வீசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் இங்கு வந்து அந்த பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அங்கு வளர்ந்து வரும் மரக்கன்றுகளை மேலும் பராமரிக்க வேண்டும். விதை பந்துக்கள் வீசப்படுவதோடு மட்டும் நின்றுவிடாமல், அவ்வப்போது மலைப்பகுதிக்கு வந்து அந்த கன்றுகளை பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் மேலும் பசுமையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் புதிய தொழில்நுட்பம் மூலம் அதிகமான விதை பந்துகளை மலைப்பகுதியில் வீசுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் அதற்காக தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story