கொரோனா மரபணு மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா மரபணு மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா மரபணு மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருச்சியில் அரசு விழா
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் மணிகண்டம் ஒன்றியம் சன்னாசிபட்டி கிராமத்தில் வருகிற 29-ந்தேதி நடைபெறும் அரசு விழாக்களில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து அவர் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேச உள்ளார்.
இதையொட்டி இந்த இரு இடங்களிலும் பந்தல் போட்டு, மேடை அமைக்கும் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களை தேடி மருத்துவம்
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் தொடங்கிவைத்தார். அப்போது, இந்த திட்டத்தை மக்களிடம் எடுத்துச்சென்று விரைவில் ஒரு கோடியாவது பயனாளியை கண்டறியும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார்.
அதன்படி, இந்த திட்டத்தை படிப்படியாக சிறப்பாக செயலாற்றியதன் மூலம் தற்போது ஒரு கோடி என்ற இலக்கை தொட்டுள்ளது. திருச்சி மாவட்டம் சன்னாசிபட்டி என்ற கிராமத்தில் வருகிற 29-ந்தேதி பிற்பகலில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த கிராமத்தை சேர்ந்த சர்க்கரை நோயினாலும், உயர்ரத்த அழுத்த நோயினாலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஒரு கோடியாவது மருந்து பெட்டகத்தை வழங்க இருக்கிறார். மேலும், அதே கிராமத்தில் உள்ள முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இயன்முறை சிகிச்சை அளிக்கப்படுவதையும் பார்வையிடுகிறார். அத்துடன், அந்த கிராமத்தில் நடைபெறும் விழாவில், மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்த பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
கொரோனா மரபணு மாற்றம் கண்காணிப்பு
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவினால் இறப்பு இல்லை. கடந்த 10 தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது.கொரோனா உயிரிழப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பிரத்தியேக ஆய்வகம் தமிழகத்தில், சென்னையில், ரூ.4 கோடி செலவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம். சீனா, ஜப்பானில் ஒமிக்ரான் பரவிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.