நிதி பற்றாக்குறையை குறைத்து வருகிறோம்


நிதி பற்றாக்குறையை குறைத்து வருகிறோம்
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நிதி பற்றாக்குறையை குறைத்து வருகிறோம் என்று கோவையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

கோயம்புத்தூர்

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நிதி பற்றாக்குறையை குறைத்து வருகிறோம் என்று கோவையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

நான் முதல்வன் திட்டம்

கோவை -அவினாசி ரோடு ஜி.டி. நாயுடு எக்ஸ்பிரிமெண்டா அறிவியல் மையத்தை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இடையே புரிதலும், அடுத்து என்ன செய்யலாம் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டு உள்ளது.

வேலை வாய்ப்பு

கோவைக்கும், ஜெர்மனிக்கும் நெருங்கிய உறவு உண்டு. இங்கு இருந்து நிறையபேர் ஜெர்மனி சென்று படிக்கவும், பணியாற்றவும் செய்கிறார்கள். இங்கு படித்து பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு தற்போது கிராஸ் சர்டிபிகேஷன் என்ற சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஜெர்மனியில் நேரடியாக சென்று வேலை வாய்ப்பை பெறலாம்.

ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் அடுத்த தலைமுறையினருக்கு பயனுள்ளதாகவும், புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கத்திற்காகவும் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஜெர்மனி யில் இருந்தும், கோவையில் உள்ள நவீன தொழில்நுட்ப உபகர ணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை

பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் சொல்வது தான் நடக்கும். ஜி.எஸ்.டி.யை பொறுத்த வரை யில் ஒரு வருடத்திற்கு முழுவதுமாகவும், 3 மாதத்திற்கு பாதியாக வும் வழங்கப்பட வேண்டியது உள்ளது.

2021-22-ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. ரூ.4 ஆயிரத்து 230 கோடி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதை கடன் வாங்கித்தான் கொடுப்பதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் சார்பில் கூறினார்கள். இதில் நியாயம் இல்லை.

இதை திருத்தும் வகையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்த மாதத்திற்குள் ரூ.4 ஆயிரம் கோடி வரை கிடைக்கும். அதன் பிறகு ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.4,500 கோடி வரை இழப்பீட்டு தொகை மட்டும் பாக்கி இருக்கும். மாதந்தோறும் வழங்கும் தொகையும் காலதாமதமாக தான் வருகிறது.

ஜி.எஸ்.டி. மாடலில் மாறுதல் தேவை. அந்தந்த மாநிலத்தில் வசூல் செய்து மத்திய தொகுப்பிற்கு தேவையானவற்றை கொடுத்து விட்டால் நியாயமான முறையாக இருக்கும்.

இதுதொடர்பாக மதுரையில் நடக்கக்கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் ஒப்புதலுடன் வலியுறுத்தப்படும்.

நிதி பற்றாக்குறை குறைந்தது

கல்விக்கடன் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு செல்லும் முன்பு வரை நிதி நிலை நன்றாக இருந்தது. அதன்பிறகு நிதி பற்றாக்குறை கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கு மேலாக சரிவை சந்தித்தது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 1½ ஆண்டு காலத்தில் 3-ல் 2 பங்கு அளவுக்கு குறைத்து இருக்கிறோம். அதேவேளையில் வருவாய் அதிகரித்து உள்ளது. கடன் வாங்குவது குறைக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் இந்த அளவுக்கு நிதி பற்றாக்குறை குறைந்து உள்ளது.

இத்தனை ஆண்டு காலமாக பங்குச்சந்தையில் தொழில் அதிபர் அதானி பங்குகள் குறித்த குளறுபடிகள் தொடர்பாக ஆர்.பி.ஐ., இந்தியாவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), எக்சேஞ்சேர்ஸ் போன்றவற்றுக்கு தெரியாமல் போனது எப்படி?.

தற்போது தான் அதானி பங்குகள் குறித்து விவாதம் நடைபெறு கிறது. இது பற்றி நாடாளுமன்றத்தில் பேசியும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இதை நிதி அமைச்சராக அல்ல, உலக அளவில் பங்குச்சந்தையில் பணிபுரிந்த அனுபவத்தில் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story