தொழில்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம்


தொழில்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தொழில்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம் என்று தேசிய உற்பத்திக்குழு இயக்குனர் சந்திப்குமார் நாயக் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

கோவை

இந்தியாவில் தொழில்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம் என்று தேசிய உற்பத்திக்குழு இயக்குனர் சந்திப்குமார் நாயக் தெரிவித்தார்.

வளர்ச்சி பாதை

இந்திய தொழில் வர்த்தக சபையில் தைவான் நாட்டின் பசுமை தொழில்நுட்பம் குறித்த ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தேசிய உற்பத்தி குழுவினுடைய இயக்குனர் சந்திப் குமார் நாயக் ஐ.ஏ.எஸ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் தேசிய உற்பத்தி குழுவின் நோக்கம் இந்தியாவில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் மேம்படுத்தி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதுதான். அந்த அடிப்படையில் இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் தைவான் நாட்டின் தொழில்நுட்ப குழுவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தொழில் வல்லுனர்கள் கோவையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு என்னென்ன அடிப்படை திட்டங்கள் தேவை என்ன? என்பதை அறிந்து அவர்கள் முழுமையான ஆலோசனை வழங்க வந்துள்ளார்கள். கோவை தொழில் துறையினருக்கு தங்கள் தொழிற்சாலைகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என்பதை கேட்டு ஆலோசனை பெறலாம்.

பசுமை புரட்சி

தைவான் நாட்டின் தேசிய உற்பத்தி குழு இயக்குனர் ஷெரின் லிங்க் பேசியதாவது:-

ஒருங்கிணைந்த பசுமை புரட்சியை தொழில்துறைகள் உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஆர்வம். தைவான் நாட்டில் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களின் பசுமை புரட்சியை தொடர்ந்து தொழிற்சாலைகளை பசுமை புரட்சியை நோக்கி நகர்ந்து உள்ளோம். தண்ணீர் மறுசுழற்சி திட்டத்திலும் எங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறோம். இந்த திட்டங்களை கோவையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செயல்படுத்த முழு சேவையை அளிக்க நாங்கள் ஆர்வத்தோடு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சைமா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளில் நிர்வாகிகள் மற்றும் பசுமை தொழில் புரிய ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் தொழில்வர்த்தக சபை தலைவர் ஸ்ரீராமுலு, துணைத்தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story