'கவர்னரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாட சட்ட வல்லுனர்களுடன் பேசி வருகிறோம்' முதல்-அமைச்சர் பேட்டி
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர் மறுத்து வருவது தொடர்பாக நீதிமன்றத்தை நாட சட்ட வல்லுனர்களுடன் பேசி வருகிறோம் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
காவிரி டெல்டா மாவட்டங் களில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா மக்களின் உரிமைகளை விட்டு கொடுக்காத அரசாக தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும். இந்த ஆண்டு நீர்வளத்துறை மூலம் காவிரி டெல்டா பகுதிகளின் கால்வாய்களை தூர்வாருவதற்கு இந்த ஆண்டு 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரத்து 773 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 96 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளும் இன்னும் சில நாட்களில் முழுமையாக முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேகதாது பிரச்சினை
இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: கர்நாடகாவில் புதிதாக அமைந்த அரசு, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்ற முனைப்பில் இருக்கிறார்கள், இது சம்பந்தமாக நீங்கள் அந்த முதல்-மந்திரியுடன் பேசி சுமுக தீர்வு காண்பதற்கு முயற்சி செய்கிறீர்களா?
பதில்: புதிதாக வந்திருக்கிற காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த ஆட்சிகளும் இதையே தான் தொடர்ந்து சொல்லி கொண்டிருந்தார்கள். அப்போதும் நாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். அதே நிலையில் தான் தற்போதும் இருந்து வருகிறோம். கருணாநிதி எப்படி அதில் உறுதியாக இருந்தாரோ, அதே உறுதியோடு இந்த ஆட்சி நிச்சயமாக இருக்கும், அதில் எந்தவிதமான சந்தேகமும் பட வேண்டாம்.
கேள்வி:- கவர்னர் இன்னும் பல மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமலே இருக்கிறார். இது சம்பந்தமாக தெலுங்கானா அரசு கூட கவர்னரை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு சென்றார்கள். அதுபோன்று ஏதாவது...
பதில்: நாங்களும் நீதிமன்றத்தை நாடலாமா என்று சட்ட வல்லுனர்களோடு கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி:- கவர்னரை மாற்றுவதற்கு ஏதாவது கோரிக்கை வைப்பீர்களா?
பதில்: நாங்கள் நினைப்பது எல்லாம் நடந்தால் இந்த பிரச்சினையே இல்லை.
பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர்
கேள்வி:- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுமா?
பதில்:- நிச்சயமாக அது பரிசீலிக்கப்படும். இருக்கிற பல்கலைக்கழகத்திற்கு வைக்கலாமா? அல்லது புதிதாக உருவாக்கப்படக்கூடிய பல்கலைக்கழகத்திற்கு வைக்கலாமா? என்பதை பரிசீலித்து முடிவு செய்வோம்.
கேள்வி:- தமிழ்நாட்டில் முக்கியமான பல்கலைக்கழகங்களில் 2 வருடங்களாக பட்டம் தராமல் இருக்கிறார்கள், அதற்கு முக்கிய காரணம் கவர்னர் தான் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
பதில்:- ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கிறார். திரும்பவும் நான் அழுத்தமாக சொல்கிறேன். உண்மை தான் அது.
கேள்வி:- விரைவாக அவர்கள் பட்டம் பெற அரசு சார்பில் ஏதாவது முயற்சி செய்யப்படுமா?
பதில்: அதற்குத்தான் பல்கலைக்கழக வேந்தர்களாக முதல்-அமைச்சரே இருக்க வேண்டும் என்று நாங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறோம்.
அமைச்சரவையில் மாற்றமா?
கேள்வி:- டாஸ்மாக் கடைகளை குறைக்கும் எண்ணம் ஏதும் இருக்கிறதா?
பதில்:- இந்த ஆண்டு 500 கடைகளை குறைப்பதாக அறிவித்திருக்கிறோம்.
கேள்வி:- அமைச்சரவையில் மாற்றம் இருக்க வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- இப்போது வந்த செய்தியைப் பார்த்தீர்களென்றால், ஒன்றியத்தில் தான் அமைச்சரவை மாற்றம் வரும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- நீர்நிலைகளை நன்றாக தூர்வாரியிருக்கிறீர்கள், சில இடங்களில் கழிவு கலக்கிறது, அவற்றை சுத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?
பதில்: அதையும் கூடுமானவரை முயற்சி செய்து தடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏதேனும் புகார் இருந்தால் சொல்லுங்கள், அதையும் கவனிக்கிறோம்.
வீட்டு மின்கட்டணம் உயர்த்தப்படாது
கேள்வி: வணிக மின்கட்டணம் உயர்வினால் வணிகம் பாதிக்கப்படும் என்று ஒரு கருத்து இருக்கிறது, அதைக் குறைப்பதற்கு...
பதில்:- திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. வீட்டு இணைப்பை பொறுத்தவரை, அவர்களுக்கு மின்கட்டணத்தை எந்த காரணம் கொண்டும் உயர்த்த மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டோம். வீட்டு இணைப்பிற்கு எந்தவிதமான கட்டண உயர்வும் கிடையாது, அனைத்து இலவச இணைப்புகளும் தொடரும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம்.
அதேபோல வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதும் தொடரும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு அளிக்கப்படக்கூடிய இலவச மின்சார சலுகைகளும் அப்படியே தொடரப்போகிறது. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
ஒன்றிய அரசின் விதிமுறைப்படி பார்த்தீர்கள் என்றால், 4.7 சதவீத கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆனால், 2.18 சதவீதமாக குறைத்து அந்த தொகையையும் மானியமாக தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு மின்வாரியத்திற்கு தருவதற்காக அரசு உத்தரவிட்டிருக்கிறது. எனவே வீட்டு இணைப்புகளை பொறுத்தவரைக்கும் எந்தவிதமான கட்டண உயர்வும் நிச்சயமாக இருக்காது.
வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 13 பைசாவில் இருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும். மற்ற மாநிலங்களில் பார்த்தீர்கள் இதைவிட அதிகம். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்துவிட்டு போய்விட்டார்கள். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது அ.தி.மு.க. ஆட்சி. அதனால்தான், இந்த கோளாறு எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது தான் உண்மை.
உறுதியாக இருக்கிறோம்
கேள்வி:- அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் வருவதை தடுப்பதாக சொன்னீர்கள். அது பற்றி தங்கள் கருத்து...
பதில்:- அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கேள்வி:- ஆவின் பாலில் கலப்படம் செய்கிறார்கள் என்று கூறுகிறார்களே?
பதில்:- அது தவறான செய்தி. இதை அன்றைக்கே அமைச்சர் மறுத்து விட்டார். திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார்கள். ஆதாரத்தை போலியாக தயார் செய்து போடுகிறார்களே தவிர, அது உண்மை இல்லை.
கேள்வி:- நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. உங்களுடைய ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டீர்களா? புதிதாக ஏதாவது கூட்டணிக் கட்சிகள்… நீங்கள் அதில் கலந்து கொள்ளப்போகிறீர்களா?
பதில்:- வருகிற 23-ந்தேதி பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஒரு கூட்டத்தை கூட்டியிருக்கிறார், அதில் முடிவெடுக்கப்படும். நான், அதில் கலந்து கொள்ளப்போகிறேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.