'நம்பர் ஒன்' விளையாட்டு வீரர்களை உருவாக்கும் முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கிறோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


நம்பர் ஒன் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கிறோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை சென்னையில் 17 இடங்களில் நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நடந்தது. விழாவில் 38 மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு இடம் பெற்றது. தடகள வீராங்கனை ரேவதி, கைப்பந்து வீரர் வைஷ்ணவ் ஆகியோர் முதல்-அமைச்சர் கோப்பைக்கான சுடரினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர். அவர் சுடரினை ஏற்றி வைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

"நமது மாநிலத்தில் இருந்து 'நம்பர் ஒன்' விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அந்த வகையில் தான் ஓராண்டுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த போட்டிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளை நடத்தி முடித்துள்ளோம்.

இவற்றை நடத்துவதற்காக சுமார் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தோம். இதில் 27 கோடி ரூபாய் அளவுக்கு பரிசுப்பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. முதல் பரிசு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, 2-ம் பரிசு ரூ.37,500 முதல் ரூ.75 ஆயிரம் வரை, 3-ம் பரிசு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகின்றன. இத்துடன் வெற்றிச் சான்றிதழ்களும், தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களும் மற்றும் வீரன் உருவச் சின்ன பொம்மையும் வழங்கப்பட உள்ளன. எந்த மாநிலமும் இப்படியொரு பிரமாண்டமான விளையாட்டு போட்டிகளை ஓர் ஆண்டு முழுவதும் நடத்தியதில்லை.

சென்னையில் 26 நாட்கள் நடைபெறும் இந்த மாநில போட்டியில் 27 ஆயிரத்து 244 வீரர், வீராங்கனைகள் களம் காண உள்ளனர். அத்துடன் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பயிற்சியாளர்கள், நடுவர்களுக்கான தங்கும் வசதி, போக்குவரத்து, உணவு வசதி என அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது.

எனவே இந்த மிகப்பெரிய வாய்ப்பினை நீங்கள் அனைவரும் சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களுடைய மாவட்டத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம், மாநில அளவிலும் தொடரட்டும். அதன் மூலம் சர்வதேச அரங்கில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமைத் தேடித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story