ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யுமளவுக்கு முன்னேறி இருக்கிறோம்; மத்திய மந்திரி அஜய்பட் பேட்டி
ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யுமளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்று மத்திய மந்திரி அஜய்பட் கூறினார்.
பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி
மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்று இறுதி நேர்முக தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 71,506 பேருக்கு நேற்று நாடு முழுவதும் பணி நியமன ஆணை வழங்கும் 4-வது ரோஜ்கர் மேளா விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றி பணி ஆணைகளை வழங்கினார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் அருகே உள்ள ரெயில்வே மண்டபத்தில் அரசு பணிகளுக்கு தேர்வான இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரி அஜய்பட் கலந்து கொண்டு, மொத்தம் 243 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதில் ரெயில்வேதுறை, அஞ்சல்துறை, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்.பி., எஸ்.ஆர்.எம்.யு. துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மத்திய இணை மந்திரி அஜய்பட் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுயசார்பு இந்தியா
மத்திய அரசு தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலை வழங்கும் பணியை செய்து வருகிறது. முன்பெல்லாம் இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அதிகம் தேடி சென்றனர். ஆனால் தற்போது இந்தியாவிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். ஒருகாலத்தில் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் நிலை இருந்தது. ஆனால் இப்போது நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறி இருக்கிறோம்.
இந்த ஏற்றுமதியில் உலக அளவில் உள்ள 25 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இது சுயசார்பு இந்தியா என்பதற்கான வலிமையை சேர்க்கிறது. ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலகளவில் பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்தது. ஆனால் அதையும் தாண்டி இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி ஸ்திரத்தன்மையில் வைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்
முன்னதாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரி அஜய்பட் சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து வரவேற்று, கோவில் பிரசாதங்களை வழங்கினார்.
அப்போது கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், உதவி கண்காணிப்பாளர் மோகன், சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி மற்றும் பலர் உடனிருந்தனர்.