சுகாதாரமான மாவட்டமாக குமரியை மாற்ற முன்வர வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்
குப்பையில்லா சுகாதாரமான மாவட்டமாக குமரியை மாற்ற முன்வர வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்.
கன்னியாகுமரி:
குப்பையில்லா சுகாதாரமான மாவட்டமாக குமரியை மாற்ற முன்வர வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்.
கிராமசபை கூட்டம்
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆமணக்கன்விளை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எழில்மிகு கிராமம்
கூட்டத்தில் தனி நபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத்தை மையப்படுத்தி "எழில்மிகு கிராமம்" என்ற சிறப்பு பிரசாரம் மேற்கொள்வது குறித்தும், குப்பைகளை வீட்டிலே தரம் பிரித்தல், அனைத்து பொது இடங்களையும் சுத்தமாக பேணுதல், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள் ஏற்படுத்துவது குறித்தும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குமரியை மாற்ற...
மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), சிறுபான்மையினர் விவகாரத் துறையின் மூலம் கல்வி உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்தல், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் மாற்றத்தை பொதுமக்கள் அறியும் வகையில் கிராம சபையில் வைத்தல், வறுமை குறைப்பு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தை குப்பையில்லாத முழு சுகாதாரமான மாவட்டமாக மாற்றிட அனைவரும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிராமசபைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அழகேசன், லீபுரம் ஊராட்சி தலைவர் ஜெயகுமாரி லீன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாந்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், பொது சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.