உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்கு புத்துயிர் ஊட்ட முன்வர வேண்டும்


உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்கு புத்துயிர் ஊட்ட முன்வர வேண்டும்
x

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்கு புத்துயிர் ஊட்ட முன்வர வேண்டும்

தஞ்சாவூர்

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்கு புத்துயிர் ஊட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆட்சிக்குழு கூட்டம்

தஞ்சை விளார்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதற்கு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், உலகத் தமிழர் பேரமைப்பின் 10-வது மாநாட்டினை வரும் செப்டம்பர் மாதம் நடத்த வேண்டும். கடந்த 46 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வந்த உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சிகளை தடுத்து, இதற்கு புத்துயிர் ஊட்டிக் காக்க வேண்டிய கடமை உலகத் தமிழர்களுக்கும், தமிழக அரசுக்கும் உண்டு. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

புத்துயிர்

தமிழ்நாட்டின் மூத்த தமிழறிஞர்களும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்களும், இந்நாள் துணைவேந்தரும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் இணைய வழியில் கூடிப் பேசி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் செயல்திட்டம் ஒன்றினை வகுக்கவேண்டும்.

மேலும் இந்த கூட்டத்தில் தூதுக்குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அக்குழு தமிழக முதல்-அமைச்சரை சந்தித்துப் பேசி, அவர் துணையுடன் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்கு புத்துயிர் கொடுக்க முன் வர வேண்டும்.

இந்த முயற்சிக்கு உலகத் தமிழர் பேரமைப்பு உறுதுணையாக இருந்து செயல்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், துணைத் தலைவர்கள் கவிஞர் காசிஆனந்தன், பொன்னிறைவன், ராமன், நிஜாமுதீன், முருகேசன், தட்சிணாமூர்த்தி, பாரதிசெல்வன், செயராமன், செயலாளர்கள் தமிழ்மணி, ஜான்கென்னடி, குபேந்திரன், சந்திரன், கோவிந்தராசு, செல்வபாண்டியன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


Next Story