ராமேசுவரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்


ராமேசுவரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
x

ராமேசுவரத்தில் மீனவ பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

ராமநாதபுரம்

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் மீனவ பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் இருந்து கடலில் பாசி சேகரித்து விட்டு வந்த மீனவப் பெண்ணை அங்குள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர்.

இதுகுறித்து போலீசார் ரஞ்சன்ராணா, பிரகாஷ் என்ற 2 வடமாநில தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் ராமேசுவரத்தில் மீனவப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஒடிசா மாநில தொழிலாளர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும்.

பாதிக்கப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்களின் அனைத்து விவரங்களையும் கணக்கெடுத்து தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களை காவல்துறை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பஸ் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோஷம்

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நின்று நாம் தமிழர் கட்சியினர் இதுவரை தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்துபோன பெண்களின் பெயர்களை நீண்ட துணியில் எழுதி அதை கையில் ஏந்தியபடி இறந்துபோன மீனவ பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து மீனவப் பெண்ணை படுகொலை செய்த வட மாநிலத் தொழிலாளர்களை கண்டித்து கோஷமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கண் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி பாசறை பொறுப்பாளர் கார்த்திகா, மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட தலைவர் நாகூர்கனி, நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் குமரன், மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகி வென்குலம் ராஜ், நகர செயலாளர் பாலு, நகர தலைவர் குட்டிமணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story