மொட்டை மாடிகளில் நீரும், உணவும் வைப்போம்: பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்:


மொட்டை மாடிகளில் நீரும், உணவும் வைப்போம்: பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்:
x

மொட்டை மாடிகளில் நீரும், உணவும் வைப்போம் பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம் என மனிதநேயர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கரூர்

காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இந்த ஆண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது.

சின்னஞ்சிறிய பறவைகள்

மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும்?. உணவு இல்லாமல்கூட கொஞ்சம் வாழலாம். நீரின்றி வாழ முடியாதே. எனவே நம்மையும், நம் பிள்ளைகளையும் காப்பதுபோல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். தானியங்களைத் தூவுவோம். உணவுகளும் இடுவோம். மனிதநேயத்துடன் அதை இப்போதே தொடங்குவோம்.

இதுகுறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த மனிதநேய ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.

மகிழ்ச்சியாக இருக்கும்

கரூரை சேர்ந்த மகாராஜன்:-

எங்கள் வீட்டில் கூண்டில் வைத்து பறவைகளை வளர்த்து வருகிறோம். நானும் பள்ளி படிக்கும் எனது மகனும் பறவைகள் வளர்ப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். தினமும் காலையில் பறவைகளுக்கு அரிசி, சோளம், கம்பு, சாப்பாடு மிக்சர் போன்ற உணவுகளை வைப்போம். அருகில் குடிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வைப்பது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதால் தினமும் அணில், மைனா, காகம், சிட்டுக்குருவி, புறா போன்ற பறவைகள் ரெகுலராக வந்து உணவு சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதும் வழக்கம்.

இதை பார்க்கிற பொழுது நமக்கு மனதிற்கு ஒரு சந்தோஷமாகவும், மன மகிழ்ச்சியாகவும் இருக்கும். பறவை வளர்ப்பது ஒரு தனி கலை. மழைக்காலங்களில் பறவைகளுக்கு புழு, பூச்சி போன்ற உணவுகள் பரவலாக கிடைக்கும். ஆனால் கோடைகாலத்தில் பறவைகளுக்கு உணவு கிடைப்பது மிகவும் அரிது. எனவே ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு மாடியில் பறவைகளுக்கு உணவு வைக்க வேண்டும். குறிப்பாக அழிந்து வரும் சிட்டுக்குருவி, மைனா போன்ற அரிய வகை பறவைகளை பேணி காக்க வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்.

பசியாறி அழியாமல் காக்கப்படும்

செல்லாண்டிபுரத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் தர்ணிஷ்:-

நான் சென்ற ஆண்டு பள்ளி விடுமுறையின் போது வீட்டில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு இரண்டு சிறிய குருவிகள் வந்தன. அவை அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு உணவு ஏதும் கிடைக்குமா என்று வாசலில் வந்து தேடியது. இது குறித்து அம்மாவிடம் கேட்டபோது அவை சிட்டுக்குருவி என்றும் முன்பு அதிகமாக இருந்த இந்த இனம் கடந்த சில வருடங்களாக பார்க்க முடியாமல் போய் தற்போது தான் பார்க்க வேண்டியதாக உள்ளது என்றும் கூறினார். மேலும் அவை உணவு தேடுவதையும் தெரிவித்தார்.இக்குருவிகளை நம்ம வீட்டில் தங்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென அம்மாவிடம் கேட்டேன்.

கூடுபோல் ஏதாவது வைத்தால் அதில் தங்கினாலும் தங்கும் என்று கூறினார். இதனை அடுத்து 2 அட்டைப்பெட்டிகளை வீட்டு தாழ்வாரத்தில் கட்டி விட்டேன். அதில் சென்று இந்த சிட்டுக்குருவிகள் தங்கி கொண்டன. பின்னர் வெளியில் சென்று இறை தேடுவதும் அந்த அட்டை பெட்டியில் வந்து தங்கி கொள்வதை வழக்கமாகிக் கொண்டன. தற்போது 20 க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் வந்து தங்கிக் கொள்வதும்விளையாடுவதும் கீச் கீச் என்று கத்துவமாக இருக்கிறது. நான் காலை பள்ளி செல்லும் முன் அவற்றிற்கு சாதம் வைத்தால் அவற்றை விரும்பி சாப்பிடுகிறது. பின்னர் அருகில் உள்ள தண்ணீர் தொட்டில் சென்று தானாகவே தண்ணீர் குடித்து கொள்கிறது. இதுபோல் தண்ணீர் தொட்டி இருக்கும் பகுதிகளில் அவற்றுக்கு தண்ணீர் கிடைத்துவிடும். தண்ணீர் கிடைக்காத இடங்களில் என்ன செய்யும்? என் போன்ற சிறுவர்களும், பெரியவர்களும் மொட்டை மாடிகளில் தண்ணீர் தொட்டியும் சிறிது உணவு வைத்தால் பறவை இனங்கள் பசியாறி அழியாமல் காக்கப்படும்.

உணவு அளிப்பது பொக்கிஷம்

நடையனூர் பகுதியை சேர்ந்த சேதுபதி:-

பறவைகளுக்கு உணவு அளிப்பது என்பது ஒரு சமூக ஆர்வலருக்கு கிடைத்த பொக்கிஷம். காகம், குருவிகளுக்கு காலை நேரத்தில் அவைகளுக்கு தேவையான இறையை வைப்பதும் அதை பார்த்த பறவைகள் வந்து எடுத்துச் சென்று உண்டு மகிழ்வதும், அதே இடத்திற்கு வந்தால் நமக்கு இறை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பறவைகள் தொடர்ந்து வந்து இறையை எடுத்துச் செல்வதும் பறவைகளுக்கு இறை தொடர்ந்து கிடைப்பதும் அவைகளுக்கு இறைகளை தொடர்ந்து வழங்குவதும் நமக்கு இறைவன் கொடுத்த பாக்கியம்.

அதன்படி காலை நேரத்தில் மொட்ட மாடியில் பறவைகளுக்கு இறைகளை வைத்து தண்ணீர் வைப்பதும் தினமும் செய்யும் அன்றாட பழக்கம். வெயில் நேரத்தில் தாகத்தை தீர்க்க வேண்டியது ஒரு தமிழனின் இந்தக் கடமையை தவறாமல் செய்கிறேன்.இதுபோல் மற்றவர்களும் பறவைகளுக்கு காலை நேரத்தில் இறைகள் வைத்து அவைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

வாடிக்கையாகி விட்டது

தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கேசவன்:-

தவுட்டுப்பாளையம் பகுதியை ஒட்டி காவேரி ஆறு செல்கிறது. காவிரி ஆற்று படுகையில் பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்து சோலையாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதிக்கு பல்வேறு வகையான பறவைகள் வருகின்றன. எங்கள் வீட்டுப் பகுதிகளுக்கும் பல்வேறு பறவைகள் வருகின்றன. இதன் காரணமாக நான் சாப்பிடுவதற்கு முன் அந்த பறவைகளுக்கு உணவை வைத்துவிட்டு சாப்பிடுவேன். அதனால் தொடர்ந்து எங்களது வீடு இருக்கும் பகுதிக்கு பறவைகள் வருகின்றன. இதன் காரணமாக தினந்தோறும் பறவைகளுக்கு உணவளித்து, தண்ணீர் வைத்து வருகிறேன். தற்போது வெயில் காலம் என்பதால் பறவைகள் நிழலை தேடியும், உணவைத் தேடி வருகின்றன. இது எனது வாடிக்கையாகி விட்டது.

தண்ணீர் வைத்தால் நல்லது

நெய்தலூர் கட்டாணி மேடு பகுதியை சேர்ந்த துரைராஜ்:- கோடைக்காலத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் நாம் கடும் அவதி அடைந்து வருவோம். அதனால் அனைவரும் குளிர்ச்சியான பொருட்கள் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் பறவைகள் என்ன செய்யும். அதுவும் ஒரு உயிர் தானே. விஷே நாட்களில் நாம் பறவைகளுக்கு முதலில் சாதம் வைத்து அதனை மூதாரையர்கள் என போற்றி வணங்கி வருகிறோம். அதேபோல் தான் தினமும் ஏதாவது உங்களது வீட்டின் அருகே பறவைக்கு தாகம் தீர்க்க தண்ணீர் வைத்தால் நல்லது. நாம் பெரும்பாலும் என வீட்டின் மேல் பகுதியில் பறவைகள் தண்ணீர் குடிக்க வேண்டும் என தனியாக ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறேன். பறவைகள் சந்தோஷகமாக வந்து அதனை குடித்து விட்டு செல்லும். அதேபோல அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு பறவைகளுக்கு தண்ணீர் வைத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.

இன்றே தொடங்கலாமே...

பல வீடுகளில் பறவைகளை தங்களது உறவுகளாவே வளர்த்து வரும் வேளையில், பறவைகளின் தாகம் தீர்க்க நாம் எடுக்கும் நல்ல நடவடிக்கைகளை நமது கடமையாகவும் பார்க்க வேண்டும். வாயில்லாத ஜீவன்களின் பசியை, தாகத்தை தீர்க்க இன்றே நல்ல நடவடிக்கையில் இறங்கலாமே!


Related Tags :
Next Story