நாம் தமிழர் கட்சியினர் வைத்த பேனர் அகற்றம்
கூடலூர் அருகே அனுமதியின்றி நாம் தமிழர் கட்சியினர் வைத்த பேனர் அகற்றப்பட்டது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப்பிரிவு-17-ன் கீழ் கொண்டு வரப்பட்ட நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை, மின்சாரம், நடைபாதை உள்பட எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறுவதில்லை. இந்தப் பிரச்சினை குறித்து தேர்தலின் போது, வாக்குறுதிகள் அளித்து வெற்றி பெறுகின்றனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணிகள் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து ஓவேலி ஆரோட்டுப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவூட்டுகிறோம் என்ற தலைப்பில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது குறித்து ஒரு இடத்தில் பேனர் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக நியூ ஹோப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டு உள்ளதாக கூறினர். மேலும் அதை அகற்றும் படி உத்தரவிட்டனர். இதற்கு கட்சியினர் மறுத்தனர். இதைத்தொடர்ந்து முறையாக அனுமதி பெறும் வரை பேனர் வைக்கக்கூடாது என போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் பேனரை அகற்றி மினி லாரியில் ஏற்றி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.