சப்-கலெக்டர் அலுவலகத்தை நெசவாளர்கள் முற்றுகை
கைத்தறி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை நெசவாளர்கள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி
கைத்தறி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை நெசவாளர்கள் முற்றுகையிட்டனர்.
கைத்தறி நெசவாளர்கள்
கைத்தறி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைத்தறி நெசவாளர்கள், பெண்கள் பதாகைகளை ஏந்தி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினா். தொடர்ந்து சிலரை மட்டும் மனு கொடுக்க போலீசார் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.
இதையடுத்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் திறமைக்கு ஏற்ப, ரகங்களை ஒதுக்கினால் நெசவு செய்வதற்கு தயாராக உள்ளோம். ஆனால், பெரும்பாலான கைத்தறி நெசவாளர்கள் தனியாரிடம் நெசவு செய்து வருகிறார்கள். தனியார் முதலாளிகள் நூல் விலை ஏற்றம் காரணமாக வாரம் ஒரு சேலை உற்பத்தி செய்வதற்கு தான் பட்டுநூல் தருகிறார்கள். கைத்தறி சேலைகள் விற்பனை இல்லாததால் நெசவாளர்களுக்கு கூலி பணம் தருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
நூல் விலை உயர்வு
பாராம்பரியமிக்க கைத்தறி நெசவு தொழில் பலரின் குடும்ப தொழிலாக உள்ளது. இதை தவிர வேறு எந்த தொழிலும், வருமானமும் இல்லை. கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தின்படி 11 ரகங்களை பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, கோராபட்டு, வேட்டி, துண்டு, லூங்கி, ஜமக்காளம் போன்றவற்றை விசைத்தறியில் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது. கைத்தறி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும்.
பட்டு மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஒரே சீராக இருக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தேக்கமடைந்த கைத்தறி துணிகளை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், கைத்தறி துணிகளை அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வாரம் ஒரு முறையாவது பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கிகளை ஏற்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.