இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி


இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி
x
தினத்தந்தி 9 Oct 2023 12:15 AM IST (Updated: 9 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

கடலூர்

கடலூர் அருகே காரைக்காடு பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி தொடக்க விழா நடந்தது. பயிற்சியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கு பயிற்சி உபகரணங்களை வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், இளைஞர்களுக்கான இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் அல்லது தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில் கைத்தறி நெசவில் நெசவுத் தொழில்நுட்பங்களை பயிற்சியின் மூலம் கற்பிப்பதனால் இளைஞர்கள் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே தொடங்கலாம்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் தொடர்பாக குறுகியகால பயிற்சி வழங்குவதன் மூலம் கைத்தறி பொருட்களின் உற்பத்தி தரத்தையும், அளவையும் மேம்படுத்துவதோடு, பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டும் வகையில் முன்னெடுக்க முடியும். மேலும், பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தினை கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக 20 இளைஞர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் கைத்தறி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story