ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்


ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருமண நிகழ்வுகளில் ஆடம்பரம் தலைதூக்க என்ன காரணம்? என்னென்ன செலவுகள் அதிகரித்திருக்கிறது? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

திண்டுக்கல்

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகவும், உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாகவுமே திருமணங்கள் இத்தனை காலமும் நடந்து வந்தன.

அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், நடுவீட்டில் பந்தி வைத்து, ஓடி ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு.

மண்டபமே தீர்மானிக்கிறது

கிராமங்களில் வீடுகளிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள். அந்தளவுக்கு கிராமங்களிலும் சரி, அவர்களது மனங்களிலும் சரி இடவசதி இருக்கும். ஆனால் நகரங்களில் அப்படி அல்ல.

திருமணங்களை மண்டபங்களில் நடத்தவேண்டிய சூழல்தான் இருக்கிறது. முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதே அரிதாகிவிடும். சில நேரங்களில் மண்டபங்கள் காலியாக உள்ள நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டால் என்ன? என்று யோசிப்போரும் உண்டு. முகூர்த்தத் தேதியைக்கூட இங்கே மண்டபங்களே தீர்மானிக்கின்றன.

திருமண 'பேக்கேஜ்'

முன்பெல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து உறவினர்கள் உதவியோடு செய்த நிலைமாறி, இப்போது 'பேக்கேஜ்' என்ற அடிப்படையில் திருமண நிகழ்வுகளை நடத்தும் கட்டாயத்திற்கு வந்து இருக்கிறோம்.

அதை நடத்திக்கொடுக்கவும் ஏஜென்சிகள் முளைத்து இருக்கின்றன. 'கையில காசு... வாயில தோசை..' கதைதான்.

ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அழைத்தது, அழைப்பிதழ் கொடுத்தது எல்லாம் மாறி, 'வாட்ஸ்-அப்'பில் அழைப்பிதழ் அனுப்புவது, 'ஜிபே', 'போன்பே' வழியாக மொய் எழுதுவது போன்ற எந்திரத்தனமான கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டோம்.

விழிபிதுங்கும் பெற்றோர்

திருமணங்களை பலர் தங்களது செல்வாக்கைப் பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே இப்போது நடத்தி வருகின்றனர்.

திருமண மண்டபத்தை 'புக்' செய்வது முதல், வரவேற்பு, டெக்கரேஷன், மேக்கப், ஆடல்-பாடல், போட்டோ- வீடியோ, சாப்பாடு என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் புகுந்துவிட்டது.

ஆனால் நடுத்தர மக்களுக்கு திருமணம் ஒரு மிகப்பெரிய வேள்வியாகவே இருக்கிறது.

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமண செலவுகளால் பெற்றோர் விழிபிதுங்கி போகிறார்கள்.

அப்படி திருமண நிகழ்வுகளில் ஆடம்பரம் தலைதூக்க என்ன காரணம்? என்னென்ன செலவுகள் அதிகரித்திருக்கிறது? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.

வரதட்சணை

அதன் விவரம் வருமாறு:-

உஷா நந்தினி கார்த்திகேயன் (நத்தம்) :- ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. அதை அற்புத நினைவாக மாற்ற ஒருசில கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அது ஆடம்பரமாக மாறி கூடுதல் செலவை ஏற்படுத்தி விடுகிறது. எனவே ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்த்து, திருமண நாளில் பிறருக்கு உதவி செய்யலாம்.

பெண்களை திருமணம் செய்து வைப்பதற்குள் ஒவ்வொரு பெற்றோருக்கும் போதும், போதும் என்றாகி விடுகிறது. ஒரு காலத்தில் வரதட்சணை என்பது பெரும் சுமையாக இருந்தது. இன்றைய இளைஞர்கள் வரதட்சணை கேட்பதை தவிர்த்து வருகின்றனர். எனது திருமணத்திலும் வரதட்சணை எனும் சிக்கல் ஏற்படவில்லை. இளைஞர்கள் வரதட்சணை வாங்குவதை தவிர்த்தால் திருமணம் ஆடம்பரம் இல்லாமல் அர்த்தமுள்ளதாக மாறிவிடும்.

திருமண செலவு அதிகரிப்பு

தனபாக்கியம் (திண்டுக்கல்) :- வீட்டை கட்டிப்பார், திருமணம் பண்ணிப்பார் என்று கூறுவார்கள். அவை இரண்டுமே குறிப்பிட்ட செலவில் நிற்காது. திருமணம் நன்றாக நடக்க வேண்டும் எனும் ஆவலில் பார்த்து, பார்த்து ஏற்பாடு செய்கிறோம். முன்பெல்லாம் வீடுகளிலேயே திருமணத்தை நடத்தினர். ஒருசில ஆயிரங்களில் திருமண விழா நிறைவு பெற்று விடும். இப்போது எல்லாம் பல வீடுகளில் திருமண விழா நடத்த இடம் இல்லை. அதோடு மண்டபத்தில் திருமணம் நடத்துவதை கவுரவமாக கருதுகின்றனர். இதனால் திருமண தேதி முடிவு செய்ததும் மண்டபத்தை முன்பதிவு செய்த பின்னரே, இதர ஏற்பாடுகளை தொடங்குகின்றனர். அதேபால் முன்பு சாமி படங்களுடன் பக்தியோடு எளிமையாக திருமண அழைப்பிதழ் அச்சடிப்பார்கள். தற்போது நாகரிகம் எனும் பெயரில் அதற்கும் கூடுதல் செலவு செய்கின்றனர். அதேபோல் தங்கம் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு வேறு. ஆனந்தமாக நடக்க வேண்டிய திருமணம் ஆடம்பரமாக மாறியதால் திருமண செலவுக்கு கையை சுட்டுவிடும் அளவுக்கு அதிகரித்து விட்டது.

பட்ஜெட்

ராஜா சுகுமார் (கன்னியாபுரம், சாணார்பட்டி) :- கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் என்பது மிகவும் குறைந்த செலவில் நடத்தப்பட்டது. திருமண விழாவை ஊர்க்கோவில் அல்லது வீட்டிலேயே சிறிய மேடை அமைத்து நடத்துவார்கள். வீடு முழுவதும் உறவினர்கள் நிறைந்து மகிழ்ச்சியான விழாவாக இருந்தது. தற்போது முற்றிலும் மாறாக நகர்ப்புறம், கிராமம் என வேறுபாடு இல்லாமல் பத்திரிகையில் தொடங்கி மண்டபம், சாப்பாடு, இசை கச்சேரி, அலங்காரம் என பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் விழாவாக திருமணம் மாறிவிட்டது. திருமணம் என்பது அந்த ஒரு நாளோடு முடிந்து போவதில்லை. திருமணத்திற்கு பட்ஜெட் போட்டு மிக தேவையான செலவை மட்டுமே செய்து, மீதமுள்ள பணத்தை மணமக்களின் வருங்கால வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தினால் அவர்கள் வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்களின் கருத்து

மொத்தத்தில் திருமணம் என்பது உறவுகளின் சங்கமமாக இருக்கலாம். அதில் ஆடம்பரம் தேவையில்லை, அன்பு மிகுதியாக இருந்தால் போதும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.


Next Story