ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்


ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்
x

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாகவுமே திருமணங்கள் இத்தனை காலமும் நடந்து வந்தன. அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், நடுவீட்டில் பந்தி வைத்து, ஓடி ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு.

கரூர்

மண்டபமே தீர்மானிக்கிறது

கிராமங்களில் வீடுகளிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள். அந்தளவுக்கு கிராமங்களிலும் சரி, அவர்களது மனங்களிலும் சரி இடவசதி இருக்கும். ஆனால் நகரங்களில் அப்படி அல்ல.

திருமணங்களை மண்டபங்களில் நடத்த வேண்டிய சூழல்தான் இருக்கிறது. முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதே அரிதாகிவிடும். சில நேரங்களில் மண்டபங்கள் காலியாக உள்ள நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டால் என்ன? என்று யோசிப்போரும் உண்டு. முகூர்த்தத் தேதியைக்கூட இங்கே மண்டபங்களே தீர்மானிக்கின்றன.

திருமண 'பேக்கேஜ்'

முன்பெல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து உறவினர்கள் உதவியோடு செய்த நிலைமாறி, இப்போது 'பேக்கேஜ்' என்ற அடிப்படையில் திருமண நிகழ்வுகளை நடத்தும் கட்டாயத்திற்கு வந்து இருக்கிறோம். அதை நடத்திக்கொடுக்கவும் ஏஜென்சிகள் முளைத்து இருக்கின்றன. 'கையில காசு... வாயில தோசை..' கதைதான்.

ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அழைத்தது, அழைப்பிதழ் கொடுத்தது எல்லாம் மாறி, 'வாட்ஸ்-அப்'பில் அழைப்பிதழ் அனுப்புவது, 'ஜிபே', 'போன்பே' வழியாக மொய் எழுதுவது போன்ற எந்திரத்தனமான கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டோம்.

விழிபிதுங்கும் பெற்றோர்

திருமணங்களை பலர் தங்களது செல்வாக்கைப் பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே இப்போது நடத்தி வருகின்றனர்.

திருமண மண்டபத்தை 'புக்' செய்வது முதல், வரவேற்பு, டெக்கரேஷன், மேக்கப், ஆடல்-பாடல், போட்டோ- வீடியோ, சாப்பாடு என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் புகுந்துவிட்டது. ஆனால் நடுத்தர மக்களுக்கு திருமணம் ஒரு மிகப்பெரிய வேள்வியாகவே இருக்கிறது. காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமண செலவுகளால் பெற்றோர் விழிபிதுங்கி போகிறார்கள்.

அப்படி திருமண நிகழ்வுகளில் ஆடம்பரம் தலைதூக்க என்ன காரணம்? என்னென்ன செலவுகள் அதிகரித்திருக்கிறது? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

மளிகை பொருட்கள் விலை உயர்வு

கரூர் சின்னதாராபுரம் அருகே உள்ள எல்லமேட்டை சேர்ந்த சமையல் மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வரும் திருநாவுக்கரசு:- ஒவ்வொரு குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் திருமணம் மிக முக்கியமானதாகும். திருமணம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது சாப்பாடு தான். திருமணத்திற்கு வரும் உறவினர்களுக்கு வயிறார சாப்பாடு போட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். திருமணத்திற்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பே ஆர்டர்களை பெற்றுக்கொள்கிறோம். ஆனால் திருமணத்திற்கு சமையல் செய்யும்போது மளிகை பொருட்கள், காய்கறிகள், சமையல் கியாஸ் உள்ளிட்டவைகளின் விலை ஏறி விடும். இதேபோல் முகூர்த்த நாட்களில் காளான் மற்றும் வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே அதனை கூடுதல் தொகைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதன்காரணமாக எங்களுக்கு லாபம் பெரிய அளவில் கிடைக்காது.

பொருளாதார நெருக்கடி

நடையனூர் பகுதியை சேர்ந்த விவசாயி மருதையப்பன்:- விவசாயத்திற்கு போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் நஷ்டம் அடைந்து வருகிறோம். இதனால் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் விவசாயிகள் தங்களுடைய மகள் மற்றும் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். இதன்காரணமாக ஒருசில விவசாயிகள் தங்களுடைய மகன் அல்லது மகளின் திருமணங்களை திருமண மண்டபங்களில் நடத்தாமல் கோவிலில் நடத்தை செலவை குறைத்து வருகிறார்கள்.

விலைவாசி விண்ணை தொடும் அளவிற்கு சென்று விட்டது. விவசாயிகளிடமிருந்து வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அதனால் அவர்கள் அதிக லாபம் அடைகிறார்கள். எனவே விவசாயத்தை காப்பாற்றவும், விவசாயிகளை காப்பாற்றவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நலிவடையும் தொழில்

கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த போட்டோகிராபர் நாகராஜ்:- திருமணம் முடிந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மலரும் நினைவாக இருப்பது புகை படங்கள் தான். கடந்த தலைமுறையில் திருமணத்தில் புகைப்படம் எடுத்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் வந்த பிறகு எங்களின் தொழில் நலிவடைந்து விட்டது. திருமணம் மற்றும் சடங்கு நிகழ்ச்சிக்கு மட்டுமே எங்களை அழைக்கிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அட்வான்ஸ் தொகை கூட தராமல் அனுப்புகின்றனர். கையில் இருந்து பணம் போட்டு ஆல்பம் ரெடியாகி மாதக்கணக்கில் வைத்திருந்தாலும், ஒருசிலர் பணம் கொடுத்து வாங்காமல் உள்ளனர். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இன்னும் சிலர் பேசிய தொகையை விட குறைவாக கொடுப்பார்கள். இப்படி தான் எங்கள் தொழில் போய் கொண்டுள்ளது. இதன்காரணமாக பலர் இந்த தொழிலை விட்டு விட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்.

குறைந்தது ரூ.5 லட்சம் செலவு

வெள்ளியணையை சேர்ந்த புதுமண தம்பதி அருண்ராஜ்-வினிஷா:- திருமணங்களை பலர் தங்களது செல்வாக்கைப் பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே இப்போது நடத்தி வருகின்றனர். நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எங்களின் திருமணம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மண்டபத்தில் தான் நடைபெற்றது. மண்டப வாடகை ரூ.50 ஆயிரம். நெருங்கிய உறவினர்களுக்கும், புதுமண தம்பதியான எங்களுக்கும் ஜவுளி எடுத்த வகையில் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவானது. சமையல் பொருட்கள், கேட்டரிங் சர்வீஸ் என ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவானது. இதுதவிர போக்குவரத்து வேன் வாடகை, நகை உள்ளிட்டவைகளுக்கு ரூ.8 லட்சத்திற்கு மேல் செலவானது. இதை நினைக்கும்போது நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சிக்காக குறைந்தது ரூ.5 லட்சம் செலவு செய்துதான் திருமணத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த செலவை ஓரளவு வருமானம் உள்ளவர்களால் தாங்கிக் கொள்ள முடியும். இல்லையேல் கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story