ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்


ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்
x

ஆடம்பர விழாக்களாக திருமணங்கள் மாறி வருகின்றதா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாகவுமே திருமணங்கள் இத்தனை காலமும் நடந்து வந்தன. அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், நடுவீட்டில் பந்தி வைத்து, ஓடி ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு.

மண்டபமே தீர்மானிக்கிறது

கிராமங்களில் வீடுகளிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள். அந்தளவுக்கு கிராமங்களிலும் சரி, அவர்களது மனங்களிலும் சரி இடவசதி இருக்கும். ஆனால் நகரங்களில் அப்படி அல்ல.

திருமணங்களை மண்டபங்களில் நடத்தவேண்டிய சூழல்தான் இருக்கிறது. முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதே அரிதாகிவிடும். சில நேரங்களில் மண்டபங்கள் காலியாக உள்ள நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டால் என்ன? என்று யோசிப்போரும் உண்டு. முகூர்த்தத் தேதியைக்கூட இங்கே மண்டபங்களே தீர்மானிக்கின்றன.

திருமண 'பேக்கேஜ்'

முன்பெல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து உறவினர்கள் உதவியோடு செய்த நிலைமாறி, இப்போது 'பேக்கேஜ்' என்ற அடிப்படையில் திருமண நிகழ்வுகளை நடத்தும் கட்டாயத்திற்கு வந்து இருக்கிறோம். அதை நடத்திக்கொடுக்கவும் ஏஜென்சிகள் முளைத்து இருக்கின்றன. 'கையில காசு... வாயில தோசை..' கதைதான்.

ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அழைத்தது, அழைப்பிதழ் கொடுத்தது எல்லாம் மாறி, 'வாட்ஸ்-அப்'பில் அழைப்பிதழ் அனுப்புவது, 'ஜிபே', 'போன்பே' வழியாக மொய் எழுதுவது போன்ற எந்திரத்தனமான கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டோம்.

விழிபிதுங்கும் பெற்றோர்

திருமணங்களை பலர் தங்களது செல்வாக்கைப் பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே இப்போது நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்தை 'புக்' செய்வது முதல், வரவேற்பு, டெக்கரேஷன், மேக்கப், ஆடல்-பாடல், போட்டோ- வீடியோ, சாப்பாடு என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் புகுந்துவிட்டது.

ஆனால் நடுத்தர மக்களுக்கு திருமணம் ஒரு மிகப்பெரிய வேள்வியாகவே இருக்கிறது. காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமண செலவுகளால் பெற்றோர் விழிபிதுங்கி போகிறார்கள். அப்படி திருமண நிகழ்வுகளில் ஆடம்பரம் தலைதூக்க என்ன காரணம்? என்னென்ன செலவுகள் அதிகரித்திருக்கிறது? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

செலவுகள் அதிகம்

பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு அன்னை நகரை சேர்ந்த செல்வகுமார்:- முன்பெல்லாம் வீடுகளில் திருமணங்கள் நடைபெற்றது. தற்போது பெரும்பாலான திருமணங்கள் மண்டபங்களின்தான் நடக்கிறது. சீர்வரிசைகளை விட மண்டபத்தில் திருமணத்திற்கு ஆகும் செலவுகளே அதிகமாக வருகிறது. மண்டபத்திற்கு என்று அதிக வாடகை கொடுக்க வேண்டியிருக்கிறது. பிறகு சமையல், மாலைகள், மேளதாளம், புகைப்படம், வீடியோ, கேட்டரிங் சர்வீஸ் ஆகியவற்றுக்கும் கூடுதல் செலவுகள் செய்ய வேண்டியது உள்ளது. மணப்பெண் அலங்காரத்திற்கு என்றே பெண் ஒப்பனையாளரை நியமிக்க வேண்டியுள்ளது. திருமணம் முடிந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சி வைத்தால் அதற்கு கூடுதல் செலவாகிறது. இது போன்ற காரணங்களால் முன்பை விட தற்போது நடத்தப்படும் திருமணத்திற்கான செலவு மிகவும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் திருமண செலவு என்றாலே பெற்றோர்கள் கதி கலங்கும் நிலைதான் உள்ளது.

வாடகை அதிகரிப்பு

பெரம்பலூர் கம்பன் தெருவை சேர்ந்த மண்டப உரிமையாளர் பாலாஜி:- கொரோனா கால கட்டத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏதும் பெரிதாக நடத்தப்படாமல் வீட்டிலேயே சிறிய அளவில் நடத்தப்பட்டபோது, மண்டபங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. பெரிய மண்டபங்களில் 24 மணி நேர கணக்கீட்டிலும், சிறிய-நடுத்தர மண்டபங்களில் நாள் அடிப்படையிலும் (தளர்வுகளுடன்) வாடகை கணக்கிடப்படுகிறது. பெரம்பலூரில் குறைந்தது சுமார் ரூ.30 ஆயிரத்தில் இருந்து மண்டப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரிய மண்டபங்களுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டதால் மண்டபத்தின் வாடகையும் அதிகரித்துள்ளது. வருடத்தில் 40 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலேயே எங்களுக்கு வேலை நாட்கள் ஆகும். அதிலும் முகூர்த்தம் இல்லாத நாட்களிலும் நாங்கள் மண்டபம் பராமரிப்பு, மின்கட்டணம் மற்றும் வரிகளை செலுத்தியாக வேண்டும். எனவே தான் அனைத்தையும் கணக்கிட்டு வாடகை உள்ளிட்ட விஷயங்களை தீர்மானிக்கிறோம். எனவே அரசு எங்களுக்கு உதவும் வகையில் உயர்த்தப்பட்ட சொத்து வரி மற்றும் மின் கட்டணத்தை குறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

மாறுபடக்கூடிய விலை

தா.பழூரை சேர்ந்த திருமண மண்டப அலங்கார பணிகள் செய்யும் பரமசிவம்:- திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு, ரூ.10 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரையிலான தொகைக்கு திருமண மண்டபங்களில் மேடை அலங்காரங்கள் உள்ளிட்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யலாம். மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள பொருட்கள் தவிர, மலர் வகைகள் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறும் அன்று மட்டுமே உபயோகப்படுத்தப்படும் மற்ற பொருட்களின் விலை அவ்வப்ேபாது மாறுபடக்கூடியது. சில நேரங்களில் வாடிக்கையாளரிடம் பேசிய தொகையை விட அதிக அளவு தொகைக்கு கூட பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில நேரங்களில் சிறிதளவு லாபம் கிடைக்கும். அதேபோல் கூலி தொழிலாளிகளுக்கான ஊதியமும் அதிகமாக தரவேண்டிய நிலை இருக்கிறது. சாதாரண நாட்களில் ஒரு நிகழ்ச்சிக்கு பேசப்படும் தொகை, கோவில் விசேஷ காலங்களில் இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற காரணங்களாலேயே திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்வதற்கான ெதாகையும் அதிகமாகிறது.

ஆடம்பர செலவு

குன்னத்தை சேர்ந்த விவேக்ராஜ்:- இன்றைய சூழ்நிலையில் வீடு கட்டுவதும், திருமணம் நடத்துவதும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சவால் போன்ேற உள்ளது. சாதாரண நாட்களில் 300 ரூபாய்க்கு விற்கப்படும் பொருட்கள் கூட, முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்பெல்லாம் திருமணமும், வரவேற்பும் வீட்டில் நடைபெற்றது. ஆனால் தற்போது திருமணத்திற்கு ஒரு மண்டபம், வரவேற்பிற்கு மற்றொரு மண்டபம் என செலவுகள் அதிகரிக்கிறது. முன்பெல்லாம் திருமணத்திற்கு வந்தவர்களை சொந்த, பந்தத்தினர் உபசரித்தனர். ஆனால் தற்போது அதற்கு என்று கேட்டரிங் சேவை வந்து விட்டது. தற்போது வரன் பார்ப்பதற்கு கூட ஆன்லைனில் பணம் கட்டும் நிலை உள்ளது. இதையெல்லாம்விட கவுரவம் என்று நினைத்துக்கொண்டு தன் நிலை அறியாமல் ஆடம்பர செலவு செய்பவர்களே அதிகம்.

புகைப்படமும், வீடியோவும்...

தா.பழூரை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆனந்த்:- திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை திருமண வீட்டார் தேவைக்கு ஏற்ப புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூறுகின்றனர். தினமும் புதுப்புது தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கேமராக்கள் வருகின்றன. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தொழிலில் ஏற்படும் போட்டி காரணமாக தரமான மற்றும் காலத்திற்கும் அவர்கள் திருப்பிப்பார்க்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்க வேண்டியுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் அதற்காக தொகையும் நிர்ணயிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வீடியோ எடிட்டிங் மற்றும் ஆல்பம் தயாரிப்பு உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் செலவுகள் பிடிக்கிறது. அதற்கேற்ப தொகையும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் லாபம் என்பது குறைவுதான்.

மக்களின் கருத்து

மொத்தத்தில் திருமணம் என்பது உறவுகளின் சங்கமமாக இருக்கலாம். அதில் ஆடம்பரம் தேவையில்லை, அன்பு மிகுதியாக இருந்தால் போதும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.


Next Story