களை கட்டிய மீன்பிடி திருவிழா
கொட்டாம்பட்டி அருகே மீன்பிடி திருவிழா களை கட்டியது. ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே மீன்பிடி திருவிழா களை கட்டியது. ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
மீன்பிடி திருவிழா
கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் நேற்று பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் நீண்ட வருடங்களுக்கு பிறகு கண்மாய்கள் நிரம்பின. தற்போது கோடை காலம் என்பதாலும், கண்மாய்களில் நீர் வற்றியதை தொடர்ந்து மீன்பிடி திருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டது.
மங்களாம்பட்டியில் உள்ள கூப்பிடாச்சி கண்மாயில் மீன்பிடித்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.இதில் அய்யாபட்டி, குன்னாரம்பட்டி, ஓட்டக்கோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலை முதலே கண்மாய் கரையில் காத்திருந்தனர்.
மீன்களை பிடித்து உற்சாகம்
இதனையடுத்து கிராமப் பெரியவர்கள் கண்மாய்க்கு வந்து அருகில் உள்ள கோவிலில் வணங்கி விட்டு வெள்ளை வீசி அனுமதி அளித்தனர். உடனே கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கண்மாய்க்குள் இறங்கி மீன்களைப் பிடிக்க தொடங்கினர். இதனால் மீன்பிடி திருவிழா களை கட்டியது.
இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்தனர். பின்னர் தாங்கள் பிடித்த மீன்களை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு எடுத்து சென்றனர். இந்த மீன்களை விற்பனை செய்யாமல் அவரவர் வீடுகளில் சமைத்து சாப்பிட்டனர். இதனால் அந்த பகுதியே மீன்குழம்பால் கமகமத்தது.