அம்மா பூங்கா அருகில் வாரச்சந்தை இடமாற்றம்
ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை பாரதிநகரில் டி-பிளாக் பகுதியில் அம்மா பூங்கா அருகில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை பாரதிநகரில் டி-பிளாக் பகுதியில் அம்மா பூங்கா அருகில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாரச்சந்தை இடமாற்றம்
ராமநாதபுரம் பஸ்நிலையம் இடிக்கப்பட்டு ரூ.20 கோடி செலவில் நவீனமாக கட்டப்பட உள்ளது. இதற்காக பஸ்நிலையத்தில் இருந்த கடைகள் மூடப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக வாரச்சந்தை பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தை இடிக்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக லெட்சுமிபுரம் பகுதியில் காலரா கொட்டகை இடத்தில் வாரச்சந்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கொரோனா காலகட்டத்தில் மார்க்கெட் இயங்கிய பாரதிநகர் டி-பிளாக் பகுதியில் அம்மா பூங்கா அருகில் வாரச்சந்தை இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல வியாபாரிகள் வாரச்சந்தை பகுதிக்கு தங்களின் பொருட்களுடன் விற்பனைக்காக வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அம்மா பூங்கா அருகில் விற்பனை செய்யுமாறு கூறி அனுப்பி வைத்தனர். அங்கு தங்களுக்கு வியாபாரம் ஆகாது என்றும், அதிக தூரம் என்பதால் பொருட்களை இங்கிருந்து கொண்டு செல்வது சிரமம் என்றும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி முறையிட்டனர்.
வாக்குவாதம்
பஸ் நிலைய விரிவாக்கம் காரணமாக தற்போது இங்கு வாரச்சந்தை இயங்க கூடாது என்று எடுத்து கூறி அனுப்பி வைத்தனர். இதனால் போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெரும்பாலான வியாபாரிகள் அம்மா பூங்கா அருகில் வாரச்சந்தை கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடங்கினர். வழக்கம்போல பொதுமக்கள் அங்கு சென்று பொருட்களை வாங்கி சென்றனர்.
சந்தையில் கடை வைத்த வியாபாரி முருகன் கூறியதாவது:- இப்பகுதியில் சாலையோரம் இடவசதி உள்ளது. ஆண், பெண் வியாபாரிகளுக்கு தேவையான கழிப்பிட வசதி, பொதுமக்கள் வந்து செல்ல பஸ் போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால் மக்கள் இப்பகுதிக்கு வருவார்கள். தற்போது திடீர் இடமாற்றம் காரணமாக பொதுமக்கள் குறைவான அளவிலேயே வருகின்றனர். அதிகமான பொதுமக்கள் வந்தால்தான் கொண்டுவந்த பொருட்களை விற்க முடியும். அடுத்தடுத்த வாரங்களில் இயல்பான அளவில் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.