வாரச்சந்தை வியாபாரிகள் திடீர் தர்ணா


வாரச்சந்தை வியாபாரிகள் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாரச்சந்தை வியாபாரிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் இடிக்கப்பட்டு ரூ.20 கோடியில் நவீன பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக பஸ்நிலைய பகுதியில் உள்ள கடைகள் இடிக்கப்பட்டுள்ளதோடு விரிவாக்கத்திற்காக வாரச்சந்தை கடைகள் இடிக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிவடையும்வரை வாரச்சந்தை நடைபெறாது என நகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் புதிய பஸ்நிலைய பகுதியில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் வழக்கம்போல் கடை போடுவதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களின் விற்பனை பொருட்களுடன் அதிகாலையிலேயே வந்திருந்தனர். கடைகள் இடிக்கப்பட்ட பகுதியில் கடைகளை போட்டு வியாபாரம் செய்யக்கூடாது என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதன்காரணமாக வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரத்திற்காக மாற்று இடம் ஒதுக்கி வழங்ககோரி பஸ்நிலைய பகுதியில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உள்ளிட்டோர் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வாரச்சந்தைக்கு மாற்று இடம் ஏற்படுத்தி தருவதாகவும், தற்போது இடிக்கப்பட்ட கட்டிட பகுதியில் கடைஅமைத்து கொள்ளுமாறும் கூறினர். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்று வியாபாரத்தை நடத்தினர். மேலும், ராமநாதபுரத்தை சேர்ந்த காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள், தினமும் சந்தை பகுதியில் வெளியூர் வியாபாரிகள் வாகனங்களில் வந்து காய்கறி விற்பனையில் ஈடுபடுவதால் தங்களுக்கு வியாபாரம் இன்றி வாழ்வாதாரம் பாதித்து வருவதால் அவர்களுக்கு கடை போட அனுமதிக்க கூடாது என்று நகராட்சி தலைவர், ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.


Related Tags :
Next Story