பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் கணியூர் வார சந்தை
கணியூரில் கட்டிட வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் வார சந்தை செயல்பட்டு வருகிறது.
சூப்பர் மார்க்கெட்
மடத்துக்குளத்தையடுத்த கணியூர் அண்ணாநகர் பகுதியில் வாரம்தோறும் புதன் கிழமைகளில் சந்தை கூடுகிறது.கிராமப்புற மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரே இடத்தில், குறைந்த விலையில் வாங்கக்கூடிய சூப்பர் மார்க்கெட்டுகளாக சந்தைகளை கருதி வருகின்றன. காலமாற்றத்தால் பிரம்மாண்டமான கட்டிடங்களில், வண்ண வண்ண விளக்குகள் ஒளிரும் வகையில் கண்களையும் மனதையும் கவரும் வகையில் வணிக நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும், கிராமப்புற மக்களுக்கு சந்தைகள் மீதுள்ள நம்பிக்கை இன்னும் குறையவில்லை. அந்த வகையில் கணியூர் பகுதியில் செயல்படும் சந்தைக்கு கணியூர், ஜோத்தம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
அடிப்படை வசதி
திறந்த வெளியில் மேற்கூரை எதுவும் இல்லாத நிலையில் செயல்படும் இந்த சந்தை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.மேலும் மழைக்கு ஒதுங்குவதற்கு இடமில்லாமலும், விற்பனைக்காக கொண்டு வந்த பொருட்களை பாதுகாக்கவும் வியாபாரிகள் போராடும் நிலை உள்ளது.மேலும் வெளியூர்களிலிருந்து ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் விற்பனைக்காக பொருட்களை இந்த சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
ஆனால் இயற்கை உபாதைகளைக் கழிக்க வழியில்லாமல் தவிக்கும் இந்த பெண்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாத நிலையில் குறைந்த வெளிச்சம் தரக்கூடிய பேட்டரி எல் இ டி விளக்குகளையும், தெரு விளக்குகளையும் நம்பியுமே இந்த சந்தை செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் வியாபாரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சந்தைக்கு போதுமான அடிப்படை கட்டமைப்புகளுடன் கூடிய நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும் என்பது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.