மக்காச்சோளத்தில் எடை மோசடி; விவசாயிகள் முற்றுகை


மக்காச்சோளத்தில் எடை மோசடி; விவசாயிகள் முற்றுகை
x

வேப்பந்தட்டை அருகே மக்காச்சோளத்தில் எடை மோசடி நடைபெற்றதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

எடை மோசடி

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளத்தை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி சென்று வருகிறார்கள்.

இந்தநிலையில் வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் உள்ள தனியார் எடை மேடையில் விவசாயி பெருமாள்சாமி என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது நிலத்தில் விளைந்த மக்காச்சோளத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி வந்து எடை போட்டுள்ளார். அப்போது டிராக்டருக்கு சுமார் 60 கிலோ முதல் 100 கிலோ எடை குறைத்து காட்டி மோசடி செய்தது தெரியவந்தது.

விவசாயிகள் முற்றுகை

இதையடுத்து கையும் களவுமாக பிடிபட்ட எடை மேடை ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளை கண்டித்து வி.ஆர்.எஸ்.எஸ்.புரம், வாலிகண்டபுரம், பிரம்மதேசம், அனுக்கூர், குடிகாடு, பாத்திமாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எடை மேடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எடை போட்ட சீட்டுகளை கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மேலும் சம்பந்தப்பட்ட எடை மேடையை அதிகாரிகள் ஆய்வு செய்து எடை மோசடி செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். எடை மேடையை சீல் வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நள்ளிரவு நேரத்தில் விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பந்தட்டை தாசில்தார் மற்றும் துணை கலெக்டர் உள்ளிடட் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் எடை மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், சமாதானம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story