பருத்தி-மக்காச்சோளம் கொள்முதல் செய்வதில் எடை மோசடியை தடுக்க வேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்


பருத்தி-மக்காச்சோளம் கொள்முதல் செய்வதில் எடை மோசடியை தடுக்க வேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி-மக்காச்சோளம் கொள்முதல் செய்வதில் எடை மோசடியை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முன்ேனாடி விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

கை.களத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தை மின்சார துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க வேண்டும். அந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும். மக்காச்சோளத்தை கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.

எடை மோசடி

பருத்தி-மக்காச்சோளம் கொள்முதல் செய்யும்போது சிலர் எடை மோசடியில் ஈடுபட்டு விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். இதனை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். மக்காச்சோள விதை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் எந்திரங்களை அதிகரிக்க வேண்டும். கூட்டத்தில் அனைத்து அரசுத்துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும். பருத்தி விதையை உரிய காலத்தில் வழங்கி ஒரே மாதிரியாக அறுவடை செய்யும் விதைகளை வழங்க வேண்டும்.

வயலபாடி கிராமத்தில் 3 மாதங்களாக சரி செய்யாமல் உள்ள மின்மாற்றிகளை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு செல்லும் பாதையை ஊராட்சித்துறை மூலம் சரி செய்து கொடுக்க வேண்டும்.

காவிரி நீரை கொண்டு வர...

காவிரி நீரை முசிறியில் இருந்து துறையூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழகத்திலே மிக அதிகளவில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை விற்பனை செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே நடமாடும் கொள்முதல் நிலையம் அமைத்து அரசு நிர்ணயம் செய்த விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவுளி பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் இழப்பீடு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். விசுவகுடி அணையில் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக பூங்கா அமைப்பதுடன், வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டத்தில், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி கழகம் மூலம் பருத்தி அறுவடை எந்திரம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூற ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

விசுவகுடி அணையின் வரத்து வாய்க்கால்கள்

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய விளக்கங்களை தெரிவிக்க அறிவுறுத்தி, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் அவர் பேசுகையில், விசுவகுடி அணைக்கான வரத்து வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை மூலம் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கூட்டத்தில் மாவட்ட அளவிலான அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் எண்ணிக்கை குறைவு

நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழக்கத்தை விட விவசாயிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறைகளின் உயர் அலுவலர்களில் சிலர் கலந்து கொள்வதில்லை என்றும், கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களால் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த மாத கூட்டத்தில் விவசாயிகள் குறைவாக கலந்து கொண்டதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம், நெற் பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக உள்ளதால் கூட்டத்திற்கு குறைவான விவசாயிகள் வந்ததாக அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவித்தனர்.


Next Story