எடை அளவு முத்திரை முகாம்
திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி இயக்குனர் ஆகியோரின் உத்தரவின்பேரில் பட்டிவீரன்பட்டியில் எடை அளவு முத்திரை முகாம் நடைபெற்றது. இதற்கு நிலக்கோட்டை முத்திரை ஆய்வாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். பட்டிவீரன்பட்டி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது தராசு, மின்னணு தராசு, இரும்பு எடைக்கற்கள், ஊற்றல் அளவை போன்றவற்றை கொண்டு வந்து முத்திரை இட்டு சென்றனர். அவர்களுக்கு முத்திரை இட்டதிற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து முத்திரை ஆய்வாளரிடம் கேட்டபோது, வத்தலக்குண்டு, தாண்டிக்குடி, பெரும்பாறை, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் ஆன்லைன் மூலமாக முத்திரை கட்டண தொகையை செலுத்தியதற்கான ரசீது, ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் முந்தைய பரிசீலனை சான்று போன்றவற்றுடன், தங்களது தராசு, மிண்ணணு தராசு, இரும்பு எடைக்கற்கள் உள்ளிட்டவற்றை முகாமிற்கு எடுத்து வந்து முத்திரை இட்டுக்கொள்ளலாம். இந்த முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி வரை நடக்கிறது. இதனை வியாபாரிகள் பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார்.