மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பணிக்கு 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறையை ரத்து செய்ய வேண்டும் - சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்


மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பணிக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் - சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்
x

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பணிக்கு ‘வெயிட்டேஜ் மதிப்பெண்' முறையை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

சென்னை

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்க அகில இந்திய துணைத்தலைவர் பி.காளிதாசன், இரண்டாண்டு டிப்ளமோ பயிற்சி நிறைவுசெய்த மருத்துவ ஆய்வக தொழில்நுட்பர்களின் நலச்சங்க மாநில செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாநில அளவில் பதிவுமூப்பு அடிப்படையில், மருத்துவ தொழில்நுட்ப ஆய்வக நிலை-2 பணியிடங்கள் நிரப்பும் நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அரசாணை 401-ன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு, டிப்ளமோ மருத்துவ தொழில்நுட்ப ஆய்வக படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வழிவகை செய்யப்பட்டது.

இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையில் மதிப்பெண்கள் நிலையாக இருப்பதால், முன்னேற்றம் என்ற வாய்ப்பு மறுக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் ஏராளமான லேப் டெக்னீசியன்கள், அரசு பணிக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்படும் நிலை உள்ளது. இது ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிலை-2 நியமனத்தில் சமவாய்ப்பும் வழங்கப்படவில்லை. எனவே வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்துசெய்துவிட்டு, எழுத்து தேர்வு முறை மூலம் பணி நியமனம் செய்திடவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story