12 மணி நேர வேலை சட்ட மசோதாவை வரவேற்கிறோம்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி
12 மணி நேர வேலை சட்ட மசோதாவை வரவேற்கிறோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
12 மணி நேர வேலை மசோதா
தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற மசோதாவை அரசே நிறைவேற்றியதற்கு பேரமைப்பு சார்பில் மனமார்ந்த வரவேற்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இன்றைய காலகட்டத்தில் உழைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கணிசமாக குறைக்க வேண்டும். தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடாக இந்தியா உருவாகி உள்ளது. ஆகவே அனைவரும் பில் போட்டு பொருட்களை வாங்க வேண்டும். அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற சிந்தனையை அரசு உருவாக்க வேண்டும்.
ஈரோட்டில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் 5 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இதில் வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு இடர்பாடுகளை தீர்மானமாக நிறைவேற்ற இருக்கிறோம். அரசுத்துறை அதிகாரிகள் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது, வணிகர் சங்க பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை செய்துதான் அதை அறிவிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு சட்டம், சாமானிய வணிகர்களுக்கு ஒரு சட்டம் என நிறைவேற்றுகிறார்கள். மக்களுக்கு ஆரோக்கியமான உணவு தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அதில் கலப்படம் என நிரூபித்தால் எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
போட்டி மிகுந்த உலகம்
ஆனால் எங்கு உற்பத்தி செய்கிறார்களோ, அங்கு சோதனையிட்டு தண்டனை கொடுக்க வேண்டும். சாமானிய கடைக்குள் நுழைந்து ஆய்வு செய்து தண்டனை வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாது. சாலையோர வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி கடைகள் அமைக்க வேண்டும். அவ்வாறு அவர்களை அங்கீகரித்தால் அதில் எங்களுக்கு மாற்ற கருத்து இல்லை.
12 மணி நேரம் வேலை செய்தால் தான் இப்போதுள்ள போட்டி உலகத்தில் சமாளிக்க முடியும் என்பதால் அந்த சட்டத்தை வரவேற்கிறோம். 24 மணி நேரமும் கடையை இயக்கலாம் என்ற சட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். எங்காவது காவல்துறையினர் இடையூறு செய்தால் அதை உடனடியாக முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.