ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு வரவேற்பு
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
8-வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி மராட்டியத்தில் 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, மராட்டியம், ராஜஸ்தான், கேரளா, குஜராத் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் தமிழ்நாடு ஏரோஸ் கேட்டோபால் சங்க மாநில தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் தலைமையில், பொதுச் செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்கமுருகன் மேற்பார்வையில் திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கோவை, மதுரை, தர்மபுரி என பல மாவட்டங்களில் இருந்து 17 பெண்கள், 57 ஆண்கள் என மொத்தம் 74 பேர் தமிழ்நாடு அணியில் விளையாடினர். தமிழக அணி 6 பிரிவுகளில் தங்கப்பதக்கத்தை பெற்றனர். போட்டிகளின் முடிவில் மொத்தம் 70 பதக்கங்களை வென்று அதிக புள்ளிகளை பெற்று தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து சங்கத் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் கூறுகையில், 'ஸ்கேட்டிங் விளையாட்டில், ஏரோஸ்கேட்டோபால் விளையாட்டினை அங்கீகரித்து தேசிய அளவில் தமிழக அணி பங்கேற்க உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வீரர்கள் மேலும் திறம்பட பயிற்சி பெற திருச்சியில் ஸ்கேட்டிங் தளம் ஒன்றை தமிழக அரசு அமைத்து தரவேண்டும்' என்றார்.