மின்சாரம் தாக்கியதில் 'வெல்டிங்' தொழிலாளி பலி
கரும்பு ஆலைக்கு தகர சீட்டு பொருத்தும் போது மின்சாரம் தாக்கி ‘வெல்டிங்’தொழிலாளி உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை,
நாட்டறம்பள்ளி அருகே கரும்பு ஆலைக்கு தகர சீட்டு பொருத்தும் போது மின்சாரம் தாக்கி 'வெல்டிங்' வேலை செய்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெல்டிங் தொழிலாளி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த அடியத்தூர் மேல் அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தன் மகன் சிலம்பரசன் (வயது 29). இவர் நாட்டறம்பள்ளி அருகே டோல்கேட் பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டின் அருகில் கரும்பு ஆலைக்கு தகர ஷீட்டு பொருத்தும் வேலைக்கு சிலம்பரசன் மற்றும் விமல்ராஜ் ஆகிய இருவரும் நேற்று சென்றுள்ளனர். இதற்காக சண்முகம் வீட்டில் இருந்து வெல்டிங் மெஷினுக்கு மின்சாரம் எடுத்துள்ளனர்.
அப்போது தகர ஷீட்டைப் பொருத்தி வெல்டிங் செய்யும் பொழுது வெல்டிங் மிஷினில் இருந்த ஒயரின் வழியாக மின்சாரம் தாக்கியதில் சிலம்பரசன் தூக்கி வீசப்பட்டு சுருண்டு விழுந்தார்.
சாவு
அவரை வீட்டின் உரிமையாளர் சண்முகம் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
சிலம்பரசனை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக சிலம்பரசனின் தந்தை நித்தியானந்தன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.