தர்மபுரியில் சுதந்திர தின விழா:கலெக்டர் சாந்தி தேசிய கொடி ஏற்றினார்29 பயனாளிகளுக்கு ரூ.94.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்


தர்மபுரியில் சுதந்திர தின விழா:கலெக்டர் சாந்தி  தேசிய கொடி ஏற்றினார்29 பயனாளிகளுக்கு ரூ.94.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 16 Aug 2023 1:00 AM IST (Updated: 16 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சாந்தி தேசிய கொடி ஏற்றி வைத்து 29 பயனாளிகளுக்கு ரூ.94.68 லட்சம் மதிப்புள்ள அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுதந்திர தின விழா

தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பின்னர் வண்ண பலூன்களையும் சமாதான புறாக்களையும் வானில் பறக்க விட்டார். தொடர்ந்து காவல்துறை, ஆயுதப்படை, என்.சி.சி. மாணவர் படை, என்.எஸ்.எஸ். மாணவர் படை ஜே.ஆர்.சி. மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் சாந்தி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.94.68 லட்சம் மதிப்புள்ள பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 208 அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் சிறந்த மருத்துவமனைகளுக்கு அவர் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதேபோன்று காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கும் கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

இந்த விழாவையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் நரிப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி, தர்மபுரி டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நல்லகுட்லஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு காதுகேளாதோர் பள்ளி, பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தா்மபுரி மாவட்ட குழந்தைகள் இல்லம், சின்னம்பள்ளி மாதிரி பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து நல்லாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் தமிழர் மரபுக்கலை சிறப்பு பயிற்சி மற்றும் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சிறப்பாக கலை நிகழ்ச்சி நடத்திய மாணவ-மாணவிகளுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும் கலெக்டர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார், தர்மபுரி உதவி கலெக்டர் கீதா ராணி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதவல்லி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், சுற்றுலா அலுவலர் கதிரேசன், முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் வெங்கடேஷ் குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story