மக்கள் தொடர்பு திட்ட முகாமில்336 பேருக்கு ரூ.2.38 கோடியில் நலத்திட்ட உதவிகள்
குமாரபாளையம் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 336 பயனாளிகளுக்கு ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
குமாரபாளையம் தாலுகா மோடமங்கலம் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையொட்டி இப்பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு மாத காலத்திற்கு முன் உதவி கலெக்டர், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உள்ளிட்ட துணை கலெக்டர் நிலையில் உள்ள அலுவலர்கள் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மோடமங்கலம் கிராம பகுதிக்கு வந்து கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மனுக்களை பெற்று வந்தனர்.
மேலும் அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேவையான பிற ஆவணங்கள் மனுதாரரிடமிருந்தும், வருவாய்த்துறை அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டியிருந்ததால் அந்த பணிகளையும் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
இம்முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் ரூ.77.28 லட்சம் மதிப்பில் 187 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 18 முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 23 பயனாளிகளுக்கு புதிய மின்னணு ரேஷன்கார்டு உள்பட மொத்தம் 336 பயனாளிகளுக்கு ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார். மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.16.76 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதியினையும் கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பட்டு வளர்ச்சி துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்ததையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
வருமுன் காப்போம் திட்ட முகாம்
மேலும் மக்கள் தொடர்பு திட்ட முகாமையொட்டி அமைக்கப்பட்ட கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமில் கலந்து கொண்ட நபர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் செல்வகுமரன், உதவி கலெக்டர் கவுசல்யா, மாவட்ட தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், வேளாண் இணை இயக்குனர் துரைசாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் கீதா உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.