கருணாநிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி; அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நெல்லை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கருணாநிதி பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 13 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், தி.மு.க. பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உருவப்படத்துக்கு மரியாதை
பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மண்டல தலைவர் பிரான்சிஸ், உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்சா, உதவி செயற்பொறியாளர் சாந்தி, கவுன்சிலர்ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நலத்திட்ட உதவிகள்
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. நெல்லை மாநகராட்சி வரி விதிப்பு, நிதிநிலை குழு தலைவரும், 29-வது வார்டு கவுன்சிலருமான சுதாமூர்த்தி தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. 500 பேருக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 29-வது வார்டு அமைப்பாளர் வேல்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு சூப்பர் மார்க்கெட் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமை தாங்கினார். பேரங்காடி அய்யப்பன் முன்னிலை வகித்தார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நெல்லை சந்திப்பு சரணாலயத்திலும் உணவு வழங்கப்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தொழிற்சங்கத்தில் 50 பேருக்கு அரிசி மற்றும் பணமுடிப்பை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கர் நகர் சாலோம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உணவு மற்றும் அரிசி வழங்கப்பட்டது. மேலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 100 நாற்காலிகள் வழங்கப்பட்டது.
திருக்குறள் புத்தகம்
பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகில் தி.மு.க. கொடியை ஏற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. 50 மாணவ- மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் கட்சிக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.