மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 240 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சித்தேரிமேடு கிராமத்தை 5 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்து 575 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கொடி நாள் நிதியாக ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டரிடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேதபுரி வழங்கினார்.
மேலும் கவுகாத்தியில் நடைபெற்ற தேசிய அளவிலான 1,000 மீட்டர் தடகள ஓட்டப்போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்த கார்த்திக் என்ற மாணவனை மாவட்ட கலெக்டர் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.