மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடந்த நாடார்கள் குடும்ப திருவிழாவில் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எர்ணாவூர் நாராயணன், என்.ஆர்.தனபாலன் ஆகியோர் வழங்கினார்கள்.

கோயம்புத்தூர்

கோவை, அக்.17-

கோவையில் நடந்த நாடார்கள் குடும்ப திருவிழாவில் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எர்ணாவூர் நாராயணன், என்.ஆர்.தனபாலன் ஆகியோர் வழங்கினார்கள்.

நாடார்கள் குடும்ப திருவிழா

கோவை நாடார் சங்க அறக்கட்டளை சார்பில் நாடார்கள் குடும்ப திருவிழா, பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா, சாதனையாளர்கள் பாராட்டு விழா மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை செல்வபுரத்தில் உள்ள நாடார் சங்க மைதானத்தில் நடந்தது.

கோவை நாடார் சங்க அறக்கட்டளை பொருளாளர் ஆர்.எஸ்.கணேசன், துணைத்தலைவர்கள் சோமசுந்தரம், டேவிட், ஜி.காளியப்பன், செயலாளர்கள் அன்புராஜ், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஜி.இருதயராஜா வரவேற்றார்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் தமிழக பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், கோவை நாடார் சங்க அறக்கட்டளை தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கோவையில் வாழும் நாடார் சமுதாய மாணவ-மாணவிகள் அனைவரையும் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.

மேலும் இந்த விழாவில் மருத்துவ உதவித்தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள், ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என ரூ.25 லட்சத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் கலைநிகழ்ச்சிகள், சாதனையாளர் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன.

ஒற்றுமையாக செயல்பட வேண்டும்

விழாவில் கலந்து கொண்ட தமிழக பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேசும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதுபோன்று நாடார் சங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கோவை நாடார் சங்கம் மிக சிறப்பாக ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது என்றார்.

என்.ஆர்.தனபாலன் பேசும்போது, கோவை நாடார் சங்கத்தில் 22 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள நாடார்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தி நமக்கு வந்துவிடும். எனவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தட்சிணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனரும், தொழில் அதிபருமான பெரிஸ் பி.மகேந்திரவேல் மற்றும் கோவை தனுஷ்கரன், ராமநாதபுரம் நாடார் ஐக்கிய சங்க தலைவர் சத்தியநாதன், அரசன்சோப் உரிமையாளர் அருள்சிங், கிருபா மருத்துவமனை டாக்டர் டென்னிஸ் கோயில் பிள்ளை, கோவை வாழ் விருதுநகர் நாடார் சங்க தலைவர் செல்வகுமார், சிங்கை நாடார் சங்க தலைவர் சங்கரலிங்கம், ஏழாயிரம்பண்ணை நாடார் சங்க தலைவர் செல்லபாண்டியன், மற்றும் கோவை நாடார் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அருள், சகாதேவன், தர்மலிங்கம், செல்வராஜ், நாராயணசெல்வன், தங்கராஜ், செல்வகுமார், கணேசன், வி.ஆர்.வேலுமயில், பில்லிகிரகாம், வக்கீல் விஜய் ஆனந்த் ஜெயராஜ், ஆனந்தபாண்டி, ராஜ்குமார், காமராஜ், கிளிக்குமார், சாமுவேல்ராஜ், அசரியா, எழிலரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவை நாடார் சங்க அறக்கட்டளை செயலாளர் பொன் செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story