குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 139 பேருக்கு ரூ.7.81 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், வழங்கினார்.
சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 139 பேருக்கு ரூ.7.81 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 482 மனுக்கள் பெறப்பட்டது.
அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மாணவர்களுக்கு பரிசு
கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் தமிழ் மன்றம் சார்பில் மாநில அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகைகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். மேலும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி, இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலை, தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மானியத் தொகைக்கான ஆணை மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியத்தொகைக்கான ஆணை ஆகியவற்றை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியத்தின் மூலம் மானாமதுரையில் மண்பாண்டம் தொழில் செய்யும் சைலா வீல் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் சார்பில் 118 குழந்தைகளுக்கு ரூ.1.44 லட்சம் மதிப்பீட்டில் உதவி பராமரிப்பு நிதி என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.7.81 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு முகாம்
மேலும் கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வழங்கபட்டு வருகிறது. மேலும் முதல் அமைச்சரின் சிறப்புத் திட்டமான "கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின்" கீழ் மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் ஆண்டில் 12 வட்டாரங்களில் தலா 3 சிறப்பு மருத்துவ முகாம் வீதம் மொத்தம் 36 முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாம்களின் மூலம் 34 ஆயிரத்து 624 பேர் பயன் பெற்றுள்ளனர். அதேபோன்று நடப்பு ஆண்டில் 36 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.