மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
x

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அமைச்சர் காந்தி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராணிப்பேட்டை

குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, வீடுகள் வேண்டி, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் பொதுநலன் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

மொத்தம் 211 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கை மற்றும் கால்களையும், ஒருவருக்கு ரூ.9,500 மதிப்பிலான சக்கர நாற்காலி, ஒருவருக்கு ரூ.2,850 மதிப்பிலான காதொலி கருவி, பணியின் போது உயிரிழந்த வருவாய்த் துறையைச் சேர்ந்த 5 கிராம நிர்வாக அலுவலர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணை, தாட்கோ மூலம் 5 தூய்மைப் பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர் நலவாரிய அட்டைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை கலெக்டர் தாரகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் வினோத் குமார், தாட்கோ மேலாளர் சண்முக சுந்தரம், உதவி மேலாளர் அமுதராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story